top of page
Search
Writer's pictureBalu

‘கால வெளியிடை’ - தவசியின் உரை

சென்ற ஆண்டு வெளியாகி அனைவருக்கும் பிடித்து மிகவும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 96. படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் காதல் மட்டும் அல்ல; அந்த மாதிரியான காதல் இப்போது இல்லை ஆனால் அப்படிப்பட்ட காதல் ஒன்று வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. அதுதான் அத்திரைப்படத்தின் வெற்றி.


‘கால வெளியிடை’ நாவல் படிக்கும் போது நமக்குள் துளிர்த்துக்கொண்டிருக்கும் காதலை கண்டிப்பாக வெளிப்படுத்தும். வருண், சங்கீதா, நித்யன், லீலா, விமலா, கிருபா இப்படி குறைந்த கதாபாத்திரங்கள் தான் ஆனால் ஏதோ ஒரு நொடியில் இதில் ஏதோ ஒருவரின் கதை உங்களை பால்யகாலத்திற்கு அழைத்துச்சென்றுவிடும்.


பள்ளிபருவ காதல் மறக்கமுடியாத அனுபவத்தை தந்துவிடும், கல்லூரி காதல் மீளமுடியாத நினைவுகளை சுமக்க வைத்துவிடும். வருண் - சங்கீதா காதலை விட நித்யன் - லீலா காதல் மிகவும் நேசிக்க வைத்தது. அதனினும் லீலா நித்யனிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் இடம் மிகவும் சிறப்பு.

லீலா மீது வருணுக்கு காதல் உருவாவது அவனுடைய பார்வை மட்டுமே. அது தஸ்தயெவ்ஸ்கியின் சாயல். ஆனால் இந்த நாவலிலுள்ள காதல்களும், கதைகளும் நமக்குள் மறக்கமுடியாத தருணங்களை தந்துவிட்டுச் செல்லும். அதில் ஆசிரியரின் கவிதை போன்ற நடை நிச்சயமாக நமக்காக எழுதிய வரிகளோ என்று தோன்ற வைத்துவிடும்.


நாவலில் எத்தனை கவிதைகள் இருந்தாலும் மிகவும் பிடித்த வரி ‘அடைந்ததை இழப்பதும், பிரிந்ததை சேர்வதும்தானே காதல்’. இது ஒன்று போதும் இந்த நாவலின் மொத்த சாரம்சமும் இந்த வரிகளில் அடங்கியுள்ளதாக தான் நான் கருதுகிறேன்.


விமலா, கிருபா கதை தனிச்சிறப்பு. ஆனால் ஆசிரியருக்கு மணிரத்னம் மீது கொண்ட ஈர்ப்பால் ஒரு வேளை அனைவரும் அவர் படத்தில் வருவது போலவே வசனம் பேசியிருந்தார்கள். விமலா எதிர்பார்க்கும் ஒரு சுதந்திரம் ஜெயகாந்தனின் ஒரு சிறுகதையை நினைவுப்படுத்தியது. ஆனால் இரண்டின் சாரம்சமும் வேறு வேறு.


வருண் வாழ்க்கையில் மீண்டும் சங்கீதா வருவதோடு நாவலை முடித்தது சிறப்பு. ஏனென்றால், அதன் பின் ஒரு பயணம் தேவையில்லை. அதுவும் ‘பால்யகால சகி’ நாவல், சங்கீதாவுக்கு வருண் தரும் கடிதம் திரைப்படம் அனுபவத்தை தந்தது.


நாவல் நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும் காதல் அனுபவத்தை நினைவுப்படுத்தும். வாங்கி படியுங்கள்


பாலு பற்றி சொல்லவேண்டும் என்றால் சமீபத்தில்தான் பழக்கம் ஆனால் நல்ல இலக்கியங்களை தேடி வாசிக்கக்கூடியவன். நிச்சயமாக சொல்கிறேன் அவனிடம் குவிந்து கிடக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரியாக போகிறவள் நிச்சயம் கவிதை மழையில் நனைவாள்.


‘கால வெளியிடை’ நிச்சயமாக காதலின் வெளிப்பாடுதான் அது.



என்னுரை


உண்மையிலேயே 96 திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம், அதுபோன்ற காதல் இப்போது பெரும்பாலும் இல்லாததுதான். 2K Kids-களுக்கே 90s kids-இன் காதல்தான் பிடிக்குமென இயக்குனர் இலன் ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார்.


‘கால வெளியிடை’ இக்காலத்தில் நடக்கும் கதையென்றாலும் லீலாவை மாதங்களாக பார்வையிலேயே காதலித்துக் கொண்டிருக்கும் வருண் 90s kids-இன் பிரதிபலிப்பே. இது என் முதல் காதல் நாவல் என்பதால் நான் காதலின் ஆரம்ப நிலையிலேயே தாங்கிக்கொள்ள எண்ணினேன். நான் எழுதப்போகும் அடுத்த காதல் நாவல் நிச்சயமாக காதலின் ஆரம்ப நிலை இருக்காது. நானதை மீண்டும் செய்ய விரும்பவில்லை. காதலின் ஆரம்பக்கட்டமும் கால வெளியிடையும் என் வாழ்வில் கடந்துவிட்டது. ஆண் - பெண் உறவை மேலும் உற்று நோக்க விரும்புகிறேன். ஆரம்ப நிலையிலேயே இருந்தால் நிச்சயமாக அது இயலாது.


வருண் - சங்கீதா காதலை விட லீலா - நித்யன் காதலை தவசி அண்ணன் அதிகமாக நேசித்ததற்கு காரணம் அது முழுக்க கற்பனை நிறைந்த கதை என்பதால் என்று நினைக்கிறேன். பார்வையில் காதல் கொள்ளும் வருணுக்கும் அதை எழுதிய எனக்கும் நிச்சயமாக தஸ்தயேவஸ்கியின் சாயல் உள்ளது. 'வெண்ணிற இரவுகள்' குறுநாவல் ஏற்படுத்திய தாக்கம் அது.


நான் நினைத்தது போலவே கால வெளியிடையில் மற்ற கதைகளை விட கிருபா - விமலா கதை வாசகர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால், அந்தக் காட்சி மணி ரத்னத்தின் ஈர்ப்பில் எழுதவில்லை; பாலு மகேந்திராவின் தாக்கத்தில் எழுதப்பட்டது.


ஒரு கதையிலோ அல்லது அதன் பின்கதையிலோ ஒரு கேள்விக்குறியாவது இருக்க வேண்டும். அதனாலேயே சங்கீதாவின் காதலுக்கு வருண் கால அவகாசம் வாங்கிவிட்டு செல்கிறான். அதற்கு பிறகு நடப்பதை வாசகர்கள் கற்பனை செய்துக்கொள்ளட்டும்.


நாவலை படித்து உரை எழுதிய தவசி அண்ணனுக்கு நன்றி. மேலும் இலக்கியத்தைப் பற்றி உங்களிடம் உரையாட ஆசைப் படுகிறேன்.

72 views0 comments

コメント


Post: Blog2_Post
bottom of page