கிட்டத்தட்டப் பல மாதங்களுக்குப் பிறகு ஓர் அ-புனைவு நூலை வாசித்தேன்’ நல்ல நூலை. மனித நடத்தைகளையும், சிறு பழக்கவழக்கங்களை ஆய்வு செய்கிறது இப்புத்தகம். அதிகாலை விழித்துக்கொண்டதும் செய்யப்படும் பல் துலக்குவது துவங்கி இரவு தொழில்நுட்பங்களைப் பார்க்காமல் உறங்குவது வரையில் மனிதன் செய்யும் சிறு சிறு தவறுகளையும், நல்ல பழக்கங்களையும் சுட்டிக்காட்டுகிறது.
பொதுவாக நாம் புதிய பழக்கம் ஒன்றைக் கடைப்பிடிக்க எத்தனித்தால் சுற்றிருப்போரிடமிருந்து நமது சுதந்திரம் கேள்விக்குள்ளாகும். அவர்களது கண்களுக்கு நாம் நாமாக இல்லாதது போல் தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது. அவர்கள் தோண்டக்கூடிய இக்குழியில் நாம் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன. அவர்களது கேள்விகளாலும் பேச்சுகளாலும் நமது சுதந்திரம் குறித்து நமக்கே சுய சந்தேகம் உருவாகக்கூடும். ஏனெனில், மனித மூளை எப்போதும் சொகுசுகளையே நாடும். அதற்குக் கூடுதல் உழைப்பைப் போடுவதற்குச் சோம்பேறித்தனம். ஆனால் புதிய நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்வதுதான் சுதந்திரம் என்பது பலருக்குத் தெரியவில்லை. நமது வாழ்க்கை நம் அட்டவணையில் இயங்கும்போது நம்மைச் சுற்று நிகழும் அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றும். எவன் ஒருவனுக்குச் சுய கட்டுப்பாடு அதிகம் இருக்கிறதோ அவனால் மட்டுமே சுதந்திரமாக வாழ முடியும். ஓர் எளிய விஷயம் நம்மை ஆட்கொண்டு விடுகிறதெனில், அதில் சுயம் என்பதற்கோ சுதந்திரம் என்பதற்கோ பேச்சுக்கே இடமில்லை. அவன் நமது சுதந்திரத்தைக் கேள்வி எழுப்பிவிட்டுச் சுண்டு விரல் அளவிலுள்ள சிகிரெட்டை இழுக்கச் சென்றுவிடுவான்.
இந்தச் சுய கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு (அதாவது தங்களது வாழ்க்கையை Track செய்யத் தெரியாதவர்களுக்கு) சுய விழிப்புணர்வு இல்லாமை என்ற நோய் தொற்றிக்கொண்டிருக்கிறது. தனது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்தவன்கூட குழியிலிருந்து தப்பிக்கக்கூடும். ஆனால் தனது பலவீனம் என்னவென்றோ, தாம் எதற்கு அடிமையாகியிருக்கிறோம் என்றோ தெரியாமலேயே ஒருவன் மயிர் போன போக்கிலிருந்துகொண்டிருந்தால் அவனால் ஒருபோதும் வாழவே முடியாது.
அனைத்தையும் தனது கைக்குள் இருப்பதாய் உணர்பவன் உண்மையில் உணர்வது அதிகாரத்தை அல்ல; ஒழுக்கத்தை. இந்த அதிகார நிழலில் ஒழுக்கத்துடன் இருப்பவனுக்கு ஒருபோதும் தாம் தன்னம்பிக்கையுடவராய் இருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றாது. சலுகைகளைப் பெற்றிருக்கும் உயரடுக்கைச் சேர்ந்தவனுக்குத் தான் பெற்றிருக்கும் சலுகைகளின் மதிப்பே தெரியாததைப்போல்தான், இந்த ஒழுக்கமானவனுக்கும் தனது தன்னம்பிக்கையின் மதிப்பு தெரியாது. ஆனால் பிறரை ஒப்பிடுகையில் அவனிடமே அது அதிகமாய் இருக்கும். தன்னம்பிக்கையும், கட்டுப்பாடும் மிகக் குறைந்தளவில் இருப்பவர்கள், தங்களிடம் அவை அதிகம் இருப்பதுபோல் நடிப்பதில் வல்லவராய் இருப்பார்கள்.
சராசரி மனிதர்களுக்கும் வெற்றியாளர்களுக்கு உள்ள வேறுபாடு என்னவென்று ஒரு நிபுணர் கூறியதாக இந்நூலின் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘எவர் ஒருவரால் ஒரே எடையைத் தினமும் தூக்குவதின் மூலம் ஏற்படும் சலிப்பைத் தாங்கிக்கொள்ள முடிகிறதோ அவரால்தான் வெற்றியடைய முடிகிறது. வெற்றிக்கு எதிர்ச்சொல் தோல்வி அல்ல; சலிப்பு. சலிப்பை ஒருவனால் நேசிக்க முடிகிறதெனில் அவனால் நிச்சயம் முன்னேற முடியும். இது காதல் உட்பட எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
Comments