செப்டம்பர் 7
எனது பத்து நாள் Streakஐ இன்று உடைத்திருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் மொத்தமே மூன்று முறைதான் No Fapல் இருந்திருக்கிறேன். அவை 18,10 10 நாட்கள் கொண்ட Streaks ஆகும். இதைத் தவிரத் தினமும் சுயமைதுனம் செய்து வருகிறேன். ஒரு சில நாட்கள் தவறிப்போயிருக்கலாம். ஆனால் இந்த இச்சையில் உழன்று அதன் ஆழத்தைப் பார்த்துவிட்டேன்.
தனிப்பட்ட காரணங்களால் இந்த சைக்கிளை மாற்ற வேண்டுமென முடிவெடுத்துள்ளேன். இது No Fab Damila FB Group Communityயில் இணைந்த பிறகு எடுத்த முடிவு அல்ல. அந்தக் குழுவில் சேரும் 5 நாட்களுக்கு முன்பே என் நலன் கருதி அதை எடுத்துவிட்டேன். If Sex is the ultimate thing what we are living for, it’s time to reduce the masturbation.
நான் இதற்குக் கிட்டத்தட்ட அடிமையாகியிருந்திருக்கிறேன் என்றே சொல்லலாம். அடிமை என்பதற்கு எந்தக் கணக்கும் இல்லை; நாம் மனதிற்கு போதும் என்று எட்டுவதுதான் அதற்கான அறிகுறி. ஒரு வாரத்திற்கு எத்தனை முறை சுயமைதுனம் செய்திருக்கிறேன் என்பதைத் தாண்டி, சுய கட்டுப்பாடு இல்லாதவனாக மாறியிருந்த நிலைக்கு, ஊரடங்கும் ஒரு முக்கிய காரணம். உடலளவிலும், மனதளவிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பிரக்ஞைக்கு எட்டியும் முடிவெடுக்க விரும்பாதவனாக இருந்தால் என்மீது எனக்கிருக்கும் அக்கரையைச் சிதைத்துக்கொள்வதற்குச் சமம். 10 நாட்களின் Streak இன்று நிறைவடைந்தது. செய்வதற்கு முன் பல்வேறு குழப்பங்களிலிருந்தேன். ஆனால் வாழ்வில் அனுபவித்த அலாதியான உச்சங்களில் இன்று அனுபவித்ததும் ஒன்றாகும். இதே சுகம் மீண்டும் கிடைக்க வேண்டுமானால் நாட்கள் தவமிருக்க வேண்டும். இதே சுகம், மற்றொரு தேகத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கும்போதும் கிடைக்க வேண்டுமானால் மாதங்கள் தவமிருக்க வேண்டும். Biscuit.
செப்டம்பர் 8
“நா ஒன்னெக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்காததுக்கு இன்னொரு காரணம் இருக்கு. இந்தக் கல்யாணம்னு வந்தாலே உறவுலெ ஒரு உறுதி வந்திரும். உறுதியும் பாதுகாப்பும் சில உரிமைகளெ ஒனக்குக் குடுத்திரும். பெண்டாட்டிதானேன்னு நீ இஷ்டத்துக்கு நடந்துக்க ஆரம்பிச்சிருவே. எம்மேலே ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சிருவே. ஆனா காதலிங்குற ஸ்தானம் வேறெ. அந்த உறவுல ஒரு நிலையில்லாமெ இருக்கு. எங்கெ நா கை நழுவிப் போயிருவேனோன்னு நீ எங்கிட்டெ எப்பவுமே மென்மையா நடந்துக்குவெ.”
கோபி கிருஷ்ணனின் பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக ஒரு பெண் கல்யாணத்தை insecurity ஆக உணர்வது போன்ற டெக்ஸ்டைப் படிக்கிறேன். அந்தப் பெண்ணின் இப்புரிதல் இந்தக் காலத்தில் கொஞ்சம் உருமாறி காதலுக்கும் பொருந்துகிறது. எவ்வித பிடிப்புமின்றி, ஆனாலும் ஒரு நிபந்தனையுடன், ஆனாலும் அவளுடன் அதிகாரப்பூர்வ உறவில்லாமல், ஆனாலும் அவளைக் காதலித்துக்கொண்டிருக்கும்போதுதான் சில பல அருமைகள் புரிய வருகின்றன.
செப்டம்பர் 9
செகாவின் உலகப் புகழ்பெற்ற ‘ஆறாவது வார்ட்’ கதையை ரஷ்யாவில் அதிகாரப்பூர்வமாகத் தழுவி படமாக எடுத்திருப்பார்கள். ஆனால் அந்தக் குறுநாவலில் இருக்கும் புனைவுத்தன்மைக்கு அப்பாற்பட்டு திரைப்படம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். மன நலம் பாதிக்கப்பட்டவர்களை விசாரிப்பதற்கு செகாவின் பெயரையும், அவரது கதைத் தலைப்பையும் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமே இல்லை. அந்தப் படம் சுவாரசியமாகவும் இருக்காது.
கோபி கிருஷ்ணன் தனது ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ பதிவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிவு செய்திருப்பார். ’ஆறாவது வார்ட்’ திரைப்படத்தின் Craftல் இருந்தாலும், இதை வாசிக்கப் படு சுவாரசியமாக இருந்தது. இப்பதிவு சமயங்களில் நம்மையும் சுய பரீசிலனைக்கு உட்படுத்துகிறது. நாம் அவர்களைச் சேர்ந்தவர்களா அல்லது அவர்களும் நம்முள் ஒருவரா அல்லது மன நலன் பாதிக்கப்படுவது தனிநபருக்கா அல்லது ஒட்டுமொத்த சமூகத்திற்குமா போன்ற பல கேள்விகளை எழுப்புகின்றன. சமூகம், மீறல் புனைவுகளை எதிர்ப்பதற்குப் பதிலாக இதுபோன்ற படைப்புகளைத்தான் எதிர்க்க வேண்டும். ஏனெனில், மன நல விடுதியில் சிகிச்சை மேற்கொள்வோரின் குரல்கள் பதிவு செய்யப்பட்டால் அது சமூகம் சீரழிந்த கருத்தன்மை கொண்ட படைப்பாக உருவாகும். எந்த மாதிரியான காரணத்திற்கெல்லாம் சமூகம் ஒருவனைத் தன்னிலிருந்து ஒதுக்கி நிராகரித்து வைத்திருக்கிறது என்ற அவலம் புரிய வருகிறது. பதிவின் ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் கீழே தருகிறேன்:
அப்பார்ட்மன்டில் வசிக்கும் ஒருவர் அங்கிருக்கும் ஒரு குழந்தையை அதன் பெயரிலேயே கதை எழுதி பத்திரிகையில் வெளியிடுகிறார். அவர், அந்தக் கதையை அக்குழந்தையிடம் காண்பித்துப் பரவசம் கொள்கிறார். ஆனால் குழந்தையின் பெற்றோர் எழுத்தாளரைக் கண்டு அஞ்சுகின்றனர். ஏனெனில், அவன் தங்களையும் கதையாக மாற்றிவிடக்கூடிய வல்லமைப் படைத்தவன். அவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதனால் அவனை ஒதுக்குகின்றனர். இதை உணர்ந்த அவன் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதாகக் கற்பனை செய்து பயப்படுகிறான். இந்த நிலையை Paranoia என்பார்கள்.
அடுத்ததாக ஒருவனுக்குப் பெண்கள் என்றால் இஷ்டம். ஆனால் 13 முதல் 15 வரையிலான பெண்கள் மட்டுமே. வயது முக்கியம் இல்லை; அழகாகவும் கொஞ்சம் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இவன் ஒரு பெண்ணுடன் பழகுகிறான் என்றாலே அவர்கள் சின்ன அழகான பெண்கள் எனக் கருத்திற்கொள்ளலாம். வீட்டில் இவனுக்கு வற்புறுத்தி கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அவளுக்கு வயது 26. அவள் இவனது கட்டத்திற்கு வரவில்லை. எனவே இவனை மனநல காப்பகத்தில் அனுமதித்துவிடுகின்றனர்.
அடுத்ததாக, 21 வயதுப் பையன் ஒருவன் தன் 24 வயது மாமா பெண்ணைக் காதலிக்கிறான். அது மாமாவுக்குத் தெரிய வர, வயதில் மூத்தவளைக் காதலிப்பது பாவம் என்று கண்டிக்கிறார். ஆனாலும் அவன் காதலில் விடாப்பிடியாக இருந்ததால், தன் மாமாவால் மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்படுகிறான்.
மற்றொரு சம்பவம் சுவாரசியமானது. ஒருவன் ஒரு கேரளப் பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவர்களால் இணைய முடியவில்லை. இவன் அந்தக் காதலுக்காகப் போராடவில்லை. தன் சொந்தத்திலேயே வேறு ஒரு பெண்ணைக் கட்டாயத்தின் பேரில் கட்டிக்கொள்கிறான். இவனுடைய மனைவியோ அடிக்கடி அம்மா வீட்டிற்குச் சென்று வந்தாள். தன் மனைவி ஏன் அளவுக்கு மீறி அம்மா வீட்டிற்குச் செல்கிறான் என இவனுக்கு அவள் நடத்தைமீது சந்தேகம் ஏற்பட்டது. இவன் எதிர்பார்த்ததுபோலவே சந்தேகமும் உறுதியானது. அவளது அம்மா வீட்டிற்கு அடிக்கடி ஒரு ஆசாமி வந்து போனான். அவளுக்கு அவனிடத்தில் கள்ள உறவு இருந்தது. அதை இவன் அங்கீகரிக்கவில்லை. எனவே அந்த ஆசாமி ஆட்களை வைத்து இவன் மண்டையை உடைக்கின்றனர். ஆசாமியும் மனைவியும் சேர்ந்த கணவனுக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றனர். ‘நீ எங்கள் உறவை அங்கீகரிக்க வேண்டும். நாங்கள் சேர்ந்து வெளியே செல்வோம், உடலுறவு கொள்வோம், குடும்பம்கூட நடத்துவோம். ஆனால் நீ அதில் தலையிடக்கூடாது. அப்படியிருந்தால் நீ இங்குச் சுதந்திரமாக வாழலாம். இல்லையெனில் உன்னைப் பைத்தியக்கார விடுதியில் சேர்த்துவிடுவோம்’ என்கிறார்கள். அவன் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் காப்பகத்தில் அனுமதிக்கப்படுகிறான். இதைப் பதிவு செய்யும் கதாபாத்திரமும் பாதிக்கப்பட்டவரும் பேசிக்கொள்ளும் ஒரு சிறிய உரையாடலைக் கீழே தருகிறேன்:
பதிவு செய்பவர் : ஒன்னு சொன்னா கோபிச்சுக்க மாட்டீங்களே. நீங்க ஒங்க மனைவி மேலெ வச்சிருக்கிற சந்தேகம் பிரமையான சந்தேகமா இருக்குறதுக்கு சாத்தியம் இருக்கில்லியா?
பாதிக்கப்பட்டவர் : அவனவனுக்குப் பட்டாத்தான் தெரியும். நா நோயாளிங்குறதுனால நீங்க என்னெ எப்பிடி வேணும்னாலும் பேசலாங்குற உரிமெ உங்களுக்கு இல்லெ. கண் முன்னால நடக்குற அநியாயத்தெப் பிரமைன்னு சொல்றீங்க. இதே இன்னொருத்தனா இருந்தா அவளெ வெட்டிப்போட்டு போலீஸ்ல சரணடஞ்சிருப்பான். நானா இருக்கத்தொட்டு பொறுமையா இருக்கேன்.
ஆக, இச்சமூகம் பொறுத்தவரையில் காதலுக்காகப் போராடுபவனும் பைத்தியம்தான்; அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிச் செல்பவனும் பைத்தியம்தான்.
துரோகமென உணர்ந்ததற்குப் பழி தீர்ப்பவன் சட்டப்படி குற்றவாளி ஆகிறான். ஒருவேளை அதனைப் பொறுத்துக்கொண்டு ஒதுங்கியிருந்தாலோ அல்லது அங்கீகரித்தாலோ பைத்தியமாக்கப்படுகிறான். பலரும் பைத்தியமாக இருப்பதைவிடக் குற்றவாளியாக இருப்பதே மேல் என நினைக்கிறார்கள்.
செப்டம்பர் 10
‘காமரூபக் கதைகள்’ நாவல் என்று நினைக்கிறேன். அதில் சாரு இவ்வாறு எழுதியிருப்பார். Internet காலத்தில் காதலர்கள் வெறும் 200 வார்த்தைகளில்தான் காதலிக்கின்றனர். எல்லோரது காதலும் இந்த 200 வார்த்தைகளுக்குள் அடங்கிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கிறது. ஆனால் சூழலால் சிறிது வேறுபடுகிறது. அதைத் தாண்டி பெரிதும் வித்தியாசம் இல்லை.
இந்த 200 வார்த்தைகளைச் சாருவே அறிந்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் மனுஷ் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். அந்த 200 வார்த்தைகளை 2 லட்சம் வார்த்தைகளாக மாற்றிய வண்ணமிருக்கிறார். அவரது கவிதை கொண்டாடப்படுவதற்கு நாம் இன்னும் காதலுறவில் முன்னேறவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவருக்கும் பெகாசசுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
செப்டம்பர் 11
புறமும் அகமும் ஒன்றுக்கு அடிமையாகியிருக்கிறது. அதிலிருந்து வெளி வர இன்றிலிருந்து பளு தூக்க முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு ஆண்மகனும் ஏதோ ஒரு பருவத்தில் ஏதோவொரு காரணத்திற்காக இந்தக் கட்டத்திற்கு வந்து நிற்பான். அதேபோல் நானும் இங்கு வருவதற்கு ஒரே ஒரு காரணம்தான். ஆனால் பல துணைக் காரணங்களுக்காக இதை வாழ்க்கை முறையாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் பழக்கமாக வேண்டும். அதற்கும் முதலில் வலியைத் தாங்க வேண்டும்; வலியை நேசிக்க வேண்டும்.
நான் அகத்திற்கு அடிமையானதுகூட வலி சார்ந்த விஷயத்திற்காகத்தான். முதலில் அந்த வலி கொன்றது. பிறகு அதுவும் சுவைக்கத் தொடங்கியது. End of the day, it gave me a damn pleasure. ஆனால் ஆரோக்கியமற்ற இன்பத்தைவிட ஆரோக்கியமான வலி மேலானது. ஆஹா! ஹெடோனிசத் தத்துவம் என்பது எவ்வளவு யதார்த்தத்திற்கு மாறாக உள்ளது!
செப்டம்பர் 12
நாங்கள் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் எங்களின் உறவின் போக்கிடத்தின்மீதுதான் எவ்வித உறுதியுமில்லை. அதன்மீது ஓர் உறுதி இருந்த காலகட்டத்தில்கூட இவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்ததில்லை.
செப்டம்பர் 13
‘ஆதவன் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பை வாசித்தேன். பிடித்த கதைகள் :
* அப்பர் பெர்த்
*கூலி
*கனவுக் குமிழிகள்
*அட்டவணை பிசகியபோது...
*இல்லாதது
*ஒரு புனிதமான காதல்
*நிழல்கள்
*சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்...
*கால் வலி
*இறந்தவன்
*புகைச்சல்கள்
*மூன்றாமவன்
*சினிமா முடிந்தபோது
*உடம்பு
*சிநேகிதிகள்
செப்டம்பர் 16
No Fap - 1 Week
நேற்று உடல் பயங்கர சோர்வாக இருந்தது. அச்சோர்விலும் உடற்பயிற்சி செய்தே உறங்கினேன். இன்று Week off எடுத்த காரணத்தால் எப்படியோ 8 அல்லது 9 மணி வரை உறங்குவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் 7 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. சுய இன்பம் செய்யாமல் இருப்பதால் இன்னும் சில தினங்களுக்கு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் 6 மணி நேரம் மட்டுமே உறங்க முடியும்.
மேலும், அவளுடன் வெளியே சென்றிருந்தேன். அவளை நான் பார்க்கும் விதம் கொஞ்சம் மாறியிருப்பதாக உணர்கிறேன். எங்களுக்கு இடையேயான சந்தோஷத் தருணங்களை நுண்ணியமாக கவனிக்க முடிகிறது. அதிகம் சந்தோஷத் தருணங்களை உருவாக்கவும் முடிகிறது. அவள்மீதிருந்த சந்தேக உணர்வுகள் சிறிது குறைந்துள்ளது. முழுதாகக் குறைய வேண்டுமெனில் தொடர்ந்து இதில் ஈடுபட வேண்டும். தவிர, அவளது மனதை உற்று நோக்க முடிகிறது. I guess I’m doing Good.
செப்டம்பர் 18
No Fap - Day 9
எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரி மாணவியும், அவளது தோழியுடனும் செக்ஸ் வைத்துக்கொள்வது போன்ற கனவு. ஆனால் அந்தக் கலவி சரியாக நடக்கவில்லை. ஒரு Anxiety தொடர்ந்துகொண்டே இருக்கிறது. முடிவில் கலவியே நடக்கவில்லை. விழித்துப் பார்த்தபோது கனவு ஞாபகம் உள்ளது. ஆனால் Wet ஆகவோ விந்து வெளியேறிய அறிகுறியும் எதுவுமில்லை.
செப்டம்பர் 21
No Fap - Day 12
கடந்த சில நாட்களாகவே இரவு சரியாகத் தூங்க முடியவில்லை. தூக்க நிலையில் இருக்கிறேனே தவிர அதில் முழுமையில்லை. மதியம் 2 மணி நேரம் உறங்கியது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மதியம் உறங்காத நாளிலும் முழுமையான இரவுத் தூக்கம் கிடைத்தபடியில்லை. No Fapல் இருப்பதற்கு முன்பு பெரும்பாலான இரவுகளில் கரை மைதுனம் செய்துவிட்டே உறங்கியிருக்கிறேன். இப்போது Stress Harmone சுரக்கத் தொடங்கியிருக்கிறது போலும். இந்தக் கட்டத்தில்தான் பொறுமை காக்க வேண்டும்.
செப்டம்பர் 22
இப்போதெல்லாம் அவளின் எல்லாப் பேச்சுகளிலும் காதல் ஒளிந்திருக்கிறது. அதற்கும் நான் இருக்கும் No Fap-க்கும் சம்பந்தம் உள்ளதாகவே கருதுகிறேன். நான் இதைக் கடைப்பிடிப்பதால் அவள் என்னைக் காதலிக்கிறாள் என்பதல்ல இதன் பொருள். இதன்மூலம் என் பார்வையும், நடவடிக்கைகளிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுத்தமான மனம் ஒன்றை அணுகும் விதமே அழகானதாக இருக்கும். இது ஒரு வகையில் எங்கள் காதலையும் உயிர்ப்பித்துக் கொள்கிறது. நான் நிகழ்காலத்தில் வாழ உதவுகிறது. எல்லாம் போகட்டும். நான் மீண்டும் எதிர்பார்த்த அவளது அன்பின் மலர் பூக்கத் துவங்கியிருக்கிறது. இதை நச்சுப்படுத்த நான் விரும்பவில்லை. அதற்காகவாவது இதைத் தொடர வேண்டும்.
செப்டம்பர் 23
சந்தேக உணர்வு, முன்பெல்லாம் உக்கிரத்திலிருந்தது. ஆனால் தற்போது No Fapல் இருப்பதால் கொஞ்சம் குறைந்திருக்கிறது. இது பற்றிய யோசனைகளைக் கொஞ்சம் சுலபமாகத் தவிர்க்க முடிகிறது. என்னைச் சுற்றியிருக்கும் பெண்களையெல்லாம் பார்க்கிறேன்; என் அம்மாவை உட்பட. எல்லோரும் ஆண்களின் சந்தேகம் எனும் ஆதிக்க உணர்வால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். நானும் அவர்களில் ஒரு வழக்க ஆணாக ஆக விரும்பவில்லை. இதை முழுவதுமாகக் குறைக்க வேண்டுமெனில் No Fapஐ இப்படியே தொடர வேண்டும்.
செப்டம்பர் 29
கோபி கிருஷ்ணன் படைப்புகளை வாசித்தேன். ‘அபத்த இலக்கியம் என்ற வகைமையில் இரண்டு சிறுகதைகள்’ மற்றும் ‘இதுவும் சாத்தியம்தான்’ ஆகிய சிறுகதைகளும் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ என்ற பதிவும் மட்டுமே பிடித்திருந்தன. ஆனால் தொகுப்பில் கிட்டத்தட்ட நூறு கதைகள் உள்ளன. 800 ரூபாய் தண்டம்.
செப்டம்பர் 30
No Fap - Day 21
பள்ளியில், வீட்டில், இணையத்தில் 21 நாட்கள் கடைப்பிடித்தலைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். புதிதாக ஒரு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது பழைய பழக்கம் ஒன்றைக் கைவிட வேண்டும் என்றாலோ அதைத் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் வாழ்க்கை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் நிகழும். இதுவரை நான் எதையுமே திட்டமிட்டு 21 நாட்கள் கடைப்பிடித்ததே இல்லை. இதுவே முதன்முறை.
மேலும், இன்று முதன்முறையாக Wet Dreams வந்தது. ஆனால் கனவில் நிகழ்ந்த அச்சம்பவம் மீது எனக்கு விருப்பமில்லை. என்னதான் இருப்பினும் நமது கனவுகளை நாம் கட்டுப்படுத்த முடியாது.
முதலில் 8 நாட்கள் streak இருந்தேன். ஆனால் ஒரு குறும்படக் காணொளி என்னைத் தொந்தரவு செய்து அதை உடைத்துவிட்டது. அதன் பிறகு மனதை மேலும் கட்டுப்படுத்தியவாறு பளு தூக்கத் தொடங்கினேன். இது உடலுக்கும் மனதிற்கும் நல்ல உதவியளிக்கக்கூடியதாகவே உள்ளது. உடல் ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டதாக உணர்கிறேன். ஆனால் மனம் கட்டுக்குள் வரவில்லை என்பதை நன்றாகவே அறிய முடிகிறது. நாளை இரவு முதல் தினமும் உறங்கும் முன் 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். விரைவில் என்னை நான் எனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
Comments