top of page
Search
Writer's pictureBalu

செம்புலப் பெயல்நீர்

'சார்ல்ஸ் Weds நித்யா' என்ற வரவேற்பு பலகையைப் பார்த்த அனைவரும், அது காதல் திருமணம் என்று அறிந்துகொண்டனர். சார்ல்ஸைத்தான் மணந்து கொள்வேன் என்பதில் விடாப்பிடியாக இருந்தாள் நித்யா. அவளின் அம்மா கல்யாணத்தில் கொஞ்சம்கூடச் சிரிக்கவில்லை. நித்யாவை மணந்துகொள்வதில் சார்ல்ஸுடைய பெற்றோர் எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்றுகூடத் திருக்கோயிலுக்குச் செல்லாத சார்ல்ஸுடையக் குடும்பத்தில் ஹிந்து மதத்துப் பெண் மருமகளாக வருவதில் ஆச்சரியமில்லை.


சார்ல்ஸ் - நித்யா-வுடைய காதல் நிச்சயமாகக் கல்யாணத்தில் முடியுமென்று அவர்களுடைய நண்பர்கள் நம்பினார்கள். சார்ல்ஸுக்குக் கல்யாணம், குழந்தை, சொந்த வீட்டைத் தாண்டிய வாழ்க்கை ஒன்றுள்ளது. நித்யாவுக்கு சார்ல்ஸ் மட்டுமே உலகம்; அவனை மணந்து கொள்ள வேண்டும், அவனுடன் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும், சொந்த வீடு வாங்கி சந்தோஷமாக வாழ வேண்டும்.


சார்ல்ஸ் தனது இருபத்து ஏழாம் வயதில் திருமணம் செய்துகொள்ளத் திட்டம் வைத்திருந்தான். நித்யாவுக்குக் கல்யாண வயதில் தங்கை இருந்ததால் அவன் மூன்றாண்டுகள் துரிதப்பட வேண்டியதாயிற்று. இது நித்யாவுக்காகச் சார்ல்ஸ் செய்த முதல் கொள்கை தியாகம். 'திருமணத்தைத்தான் சீக்கிரம் செய்துகொண்டோம். குழந்தை பெற்றுக்கொள்ளும் யோசனையை மூன்றாண்டுகளுக்கு எடுக்க வேண்டாம்.' என இருவரும் பேசிக்கொண்டனர். நான்கு ஆண்டுகள் நன்றாக வேலை செய்து பதவி உயர்வும், சம்பள உயர்வும் வாங்கிக் குவித்தனர். யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் தேவைகளைத் திருப்தியாகப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு குடும்பம் வளர்ந்திருந்தது.


அன்று, நித்யாவின் இருபத்து எட்டாம் பிறந்தநாள். வாழ்த்து தெரிவிப்பதற்காக இரவு பன்னிரண்டு மணி வரை சார்ல்ஸ் காத்திருந்தான்.


அவளை வாழ்த்தியவுடன், "வெறுங்கையோட விஷ் பண்றானேன்னு தப்பா நினைச்சிக்காத. Ask me if you want Something. முராகமியோட ‘Birthday Girl’ சிறுகதையில் வர அந்த ஆள் மாதிரி நீ என்ன கேட்டாலும் தர நான் தயார்”


“Let’s have a Child” என்றாள் புதியதோர் இச்சை பார்வையுடன். சார்ல்ஸ் பதிலேதும் கூறாமல் அந்த இரவுக்கான தன் முதல் முத்தத்தை அவள் பின்னங்கழுத்தில் பதித்தான். ஆணுறை அணியாத முதல் உடலுறவை அவ்விரவில் அவர்கள் அரங்கேற்றினர்.


ஆறு மாதங்கள் ஆனது. குழந்தை பிறப்புக்கான எந்த அறிகுறியுமில்லை. கல்யாணம் ஆனதிலிருந்தே சுற்றத்தாரின் குழந்தை குறித்த விசாரணைகளுக்கு, "நாங்கதான் தள்ளிப் போட்டிருக்கோம்" என்று கூறி வந்தாள் நித்யா. அதே பதிலை இப்போது கூறினாலும் அதில் மெய்யில்லை. யாரேனும் குழந்தை பற்றிக் கேட்டால் அல்லது பிள்ளையைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் தாயைக் கண்டால் கவிழ்ந்து விடுகிறாள் நித்யா. சார்ல்ஸுக்கு இது பெரிய விஷயமாகவே இல்லை. அவன் குழந்தைக்கு ஒப்புக்கொண்டதே நித்யாவுக்குச் செய்த இரண்டாம் கொள்கைத் தியாகம். குழந்தை பெற்றுக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் முடங்கிவிட வேண்டாம் என்ற எண்ணம் அவனுக்குக் கல்லூரி காலத்தில் உதித்தது.


மாதங்கள் கழித்தும் தங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததால் நித்யா அதைச் சார்ந்து கூகுள் செய்து பார்த்தாள். அந்தத் தேடுதலின்மூலம், IVF முறையை முயற்சி செய்து பார்க்கலாமென்ற யோசனை அவளுக்குத் தோன்றியது. விடாமுயற்சியில் சாத்தியப்படுத்திவிடும் அம்முறையை மூன்றாம் முயற்சியில் தோல்வி அடைந்ததற்கே நம்பிக்கை இழந்தாள். நித்யா சொல்லும் எல்லா வழிகளுக்கும் சார்ல்ஸ் ஒரு பப்பட் பொம்மை போல் தயாராகவே இருந்தான்.

நான்காம் முறை IVF பரிசோதனைக்கு அவனே நித்யாயுடன் சென்றான். கடந்த மூன்று முறையாக அவர்களைச் சந்தித்து வந்த சிறப்பு மருத்துவர் அன்று மருத்துவமனைக்கு வரவில்லை. சார்ல்ஸ் அடுத்த இரண்டு நாட்களில் வேலை விஷயமாகப் பெங்களூரு செல்ல வேண்டியிருந்தது. இருவரும் செய்வதறியாது மருத்துவமனையில் நின்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, “உங்க Sperm-ஐ Lab-ல கொடுத்திட்டு போங்க. டாக்டர் ரெண்டு மூனு நாள்ல வந்திடுவார். அதுவரைக்கும் Sperm Bank-ல இருக்கட்டும். நீங்க அவருக்குக் கால் பண்ணி சொல்லிடுங்க" என்றாள் பெண் மருத்துவர். சார்ல்ஸ் தன் விந்தணுக்களைக் கொடுத்ததும் காரை எடுத்துக்கொண்டு மனைவியுடன் கிளம்பினான்.


"குழந்தையே பெத்துக்கக்கூடாதுன்னு முற்போக்கு பேசின உங்க வைத்தி மாமாலாம் இப்போ ரெண்டு குழந்தையோடத்தான் இருக்காங்க" என்று விரக்தியுடன் பேச்சைத் தொடங்கினாள் நித்யா.


"நமக்குக் குழந்தை இல்லாததை நீதான் போட்டு பெரிசு பண்ணிட்டு இருக்க"


"உனக்கென்ன! நீ புருஷன்.."


விகாரமான அமைதி நிலவியது.


"எனக்குக் குழந்தை பெத்துக்க ஆசை இல்லன்னு நினைச்சியா? அதெல்லாம் அப்போ. பேசாம நம்ம அடாப்ட் பண்ணிக்கலாமா? பெத்துக்கிட்டாத்தான் குழந்தையா?" என்று சார்ல்ஸ் சொன்னதும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் நித்யா.


"நான் ஒன்னு சொன்னா கேப்பியா?"


"ஹ்ம்ம்"


"நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ டா" என்றாள், தன் அழுகையைத் துடைத்தபடி.


"ஹே! ஏன் இப்படியெல்லாம் பேசுற. குழந்தைத்தான் வாழ்க்கையா என்ன? இங்க பார். நானும் வைத்தி மாமா மாதிரிதான். எனக்குக் குழந்தை அவசியமில்ல; வெறும் ஆசைதான். அதுவும் உனக்காக. என்னால குழந்தை இல்லாமலே உன்கூட நிம்மதியா வாழ முடியும்"


"I don't deserve You"


"Shut Up நித்யா. இது உன்னோட பிரச்சனைன்னு நீ எப்படி முடிவு பண்ற?"


"Sperm-ஐ inject பண்ணியும் Failure ஆகுதுன்னா இது என் பிராப்ளம்தான்"


"மக்கு, எனக்கு பிராப்ளம் இருந்தாலும் Failureதான் ஆகும்"


"என்ன ஆறுதல் படுத்தலாம் இப்படி சொல்லாத. தப்பு என் மேலதான். இப்போலாம் உன்கூட செக்ஸ் வெச்சிக்கும்போதும் எனக்கு எவ்ளோ கில்டியா இருக்கு தெரியுமா?"


சார்ல்ஸ் காரை நிறுத்தி, "என்மேல அளவுக்கு மீறி அன்பா இருக்கிறதைவிட நீ வேற எந்தத் தப்பும் பண்ணிடல" என்றான்.


”இங்கே பார். ஒரு உயிரைப் பெத்து வளர்க்கிறதுங்கிறது Lifetime Commitment; Lifetime Achievement இல்லை" என்ற அவனுடைய வார்த்தைகளே நித்யாவுக்குக் கைக்குட்டை.


இரண்டு நாட்கள் கழித்து, சார்ல்ஸ் பெங்களூரு கிளம்பிக் கொண்டிருந்தான்.


”நாலு நாள்ல வந்திடுவேன். தேவையில்லாம எதையும் யோசிச்சிட்டு இருக்காதே” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.


சார்ல்ஸின் இன்மை அவளை வருத்தியது. சார்ல்ஸ் காரில் சென்று கொண்டிருக்கும்போது நித்யாவின் மனநிலையை எண்ணி வருத்தப்பட்டான். பெங்களூரு நெடுஞ்சாலை வழியே சென்று கொண்டிருக்கையில் லாரி மோதி விபத்தின் கணத்தில் உயிரிழந்தான் சார்ல்ஸ்.


நித்யாவால் அவன் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளுக்குத் தற்கொலை எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. சார்ல்ஸ் இல்லாத உலகத்தை அவள் அருவருத்தாள். அவனுடைய பிரேத சடங்கு முடிந்ததும் நித்யாவிடம் பேசுவதற்காக அவளுடைய அம்மாவும் சித்தியும் வந்திருந்தனர்.


அம்மா சொன்னாள், "இப்படியெல்லாம் நடக்கும்னு யார் யோசிச்சா? என்ன ஆனாலும் அவர் திரும்பி வர போறதில்ல. நீ இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கோ நித்யா. என்னால உன்னை இப்படிப் பார்க்க முடியல"

சித்தி : "எனக்குத் தெரியும் நித்யா. உன்கிட்ட எந்தக் குறையும் இருக்காது. அவராதான் இருக்கும்... அதான் அவர் இறந்துட்டார், ல.."


நித்யா : "அவர் இருக்கும்போது என்கிட்ட குறை இருக்குமோன்னு நீங்க வெளில பேசிக்கிட்டதா கேள்விப் பட்டேன்"

"அப்படி இல்ல மா..."


"இந்த வீட்டைவிட்டு நான் வரப்போறதில்ல ம்மா. டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க. அப்புறம் சித்தி, எனக்குக் குழந்தை பெத்துக்கணும்னுலாம் ஆசை இல்லை. அவரோட குழந்தை பெத்துக்கணும்னுதான் ஆசை. அதனால கல்யாண பேச்செல்லாம் எடுத்து யாரும் இங்க வராதீங்க"


நித்யாவின் பேச்சைக்கேட்டதும் தாமதிக்காமல் இருவரும் கிளம்பினர். நித்யா நேராக மருத்துவமனைக்கு விரைந்தாள். ஐந்தாம் முறை IVF Test நடந்தது. ஐம்பதே நாட்களில் நித்யா கர்ப்பமானாள். சார்ல்ஸ் மீண்டும் புத்துயிர் பெற்று வருவதற்காக நித்யாவின் கருவில் காத்திருந்தான்.



65 views0 comments

Comentários


Post: Blog2_Post
bottom of page