top of page
Search
Writer's pictureBalu

ஜூன் மாத நாட்குறிப்பு

ஜூன் 8, 2021

எஸ்.ரா தொகுத்த ‘100 சிறந்த சிறுகதைகள்’ நூலை வாசித்தேன். நிறைய சிறுகதைகளை ஸ்கிப் செய்துவிட்டேன். புத்தகத்தைப் பாதியிலேயே நிறுத்திவிடலாம் எனும் அளவிற்குச் சலிப்பு. இருந்தாலும், தமிழ் எழுத்தாளர்களை நிராகரிக்கக்கூடாதென்பதால் முழுதாக வாசித்து முடித்தேன்.

விடியுமா? - கு.பா.ரா

அன்பளிப்பு - கு.அழகிரிசாமி

கோமதி - கி.ரா

பிரயாணம் - அசோகமித்ரன்

மகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துலிங்கம்

டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி.நா

மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

இந்தச் சிறுகதைகள் மட்டும் எனக்குப் பிடித்தன. அக்னி பிரவேசம், முள் போன்ற சில சிறுகதைகளை ஏற்கனவே நான் வாசித்திருந்ததால் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.


ஜூன் 9, 2021

அன்புள்ள மணிரத்தினத்தின் படத்திற்கு, நவீன் எழுதுவது,

தங்களின் புத்தகத்தை 9.5.2021 அன்று படித்தேன். படித்ததும் தாங்கள் பாலுவா அல்லது வருணா என்று ஒரு சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது. வருண் என்னும் கதாபாத்திரம் தங்களைத்தான் பிரதிபலித்தது. தங்களுக்கு இது முதல் புத்தகம். ஆனால் நாவலைப் படித்து முடித்தவுடன் அவ்வாறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை. கவிதைகள் ஒவ்வொன்றும் கதைக்கேற்ப கோர்க்கப்பட்ட முத்துக்களாய் இருந்தன. ப்ரீத்தா மற்றும் நித்யன் என்ற கதாபாத்திரத்தை வைத்து தாங்கள் கூற வேண்டிய கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அருமையாக எழுதியுள்ளீர்கள்.

கதையில் இசை, கவிதை, காமம் மற்றும் தங்களின் முற்போக்கு சிந்தனை, இவை அனைத்தையும் நான் ரசித்தேன். கதையை விடவும் கவிதையை மேலாக நான் ரசித்தேன்.

இதுவரை தங்களை ஒருமுறைகூட நான் பார்த்ததில்லை. இருப்பினும், தங்களிடத்தில் நான் நட்பும், அன்பும் வைத்துள்ளேன். நான் எனது நட்பு பிசிராந்தையார் நாடக நூலில் உள்ள நட்பு போல என எண்ணி மகிழ்வேன்.

மேலும் தங்களது முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துகள், வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்

நவீன்



ஜூன் 10, 2021

‘கால வெளியிடை’ குறுநாவல் வெளியானதிலிருந்து இன்று வரை வாசகர்களிடமிருந்து நான் நினைத்ததைவிட அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் பதிப்பு போட்டு ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தது முதல், நேற்று வந்த நவீனின் கடிதம் வரை அனைத்துமே More than deserved. என் படைப்பு எனக்கே காலாவதியாகிவிட்ட காரணத்தாலேயே இதனைச் சொல்கிறேன். நாளை எனக்குத் திருப்தியளிக்கும் ஒரு புத்தகத்தை எழுதிய பிறகு அது எவ்வளவு கொண்டாடப்பட்டாலும் எனக்குப் போதாதுதான். ஆனால் ‘கால வெளியிடை’ பொறுத்தவரையில் அப்படியல்ல. போதுமெனச் சொன்ன பின்பும் வரும் வாசகர்களின் கட்டுரை, கடிதம், குறுஞ்செய்திகள், அழைப்புகள் அனைத்தும் எனது அடுத்த புத்தகத்திற்கு ஊக்கமளிப்பதாக உள்ளன. அதற்கான பணியைத் தொடங்க உள்ளேன்.


ஜூன் 16, 2021

திருமணத்தைவிட செகாவ் ஒன்றைக் கடுமையாக எதிர்த்தாரெனில், அது பொய்மை. திருமணத்தை எதிர்த்து அவர் எழுதிய கதைகளிலும், அதற்கு அப்பாற்பட்ட கதைகள் சிலவற்றிலும் அவர் மனிதன் பொய் சொல்லியோ அல்லது பொய்யாக வாழ்வதையோ முற்றிலும் வெறுத்தார். இன்றுகூட ‘The Helpmate’ என்ற அவருடைய ஒரு கதையை வாசித்தேன். மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களையும் எதிர்த்து எழுதப்பட்ட கதை அது. சார்லி சாப்ளின் வகையான நையாண்டி எழுத்தை அக்கதையில் கையாண்டிருப்பார்.

என் ஆசானின் விருப்பத்திற்கு இணங்கி, என்னால் வாழ்வில் பொய் சொல்வதை மட்டும் தவிர்க்க இயலவில்லை. என் மனநிலைக்குச் சேதம் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள ஏதேனும் பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறேன். ஆனால் அது என்னைக் குற்றவுணர்வால் இன்னும் சோதிக்கிறது. குடும்பத்தினரிடமிருந்து சுதந்திரத்தை விரும்பி திருமணம் செய்துகொண்டு மீண்டும் சிறைக்குச் சென்ற தற்கால பெண்களின் கதைபோல் உள்ளது எனது வாழ்க்கை.



ஜூன் 19, 2021



இயல்பான மனவோட்டம் தடைப்பட்டிருக்கிறது. இதயத்தின் ஓரத்தில் அகங்காரத்தின் புழு உருவாகியிருக்கிறது. கூடவே தாழ்வு மனப்பான்மை என்ற நாகம் முதன்முறையாக அதன் தலையுயர்த்தி படம் எடுக்கிறது. ஒரு பாம்பின் சிரிப்புச் சத்தம் காதில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய தருணமிது. அதனுடன் பலமிழந்து போராடுகிறேன். உதவிக்கு அண்டை நாட்டுப் போர் வீரர்களை நாடி நிற்கிறேன். அவர்கள் என்னிடம் தங்களது போர்வாளுக்குப் பூச்சூடிப் பரிசளிக்கின்றனர். என்னுள் வளர்ந்த பாம்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுவது அந்தப் பூவுக்காகவா அல்லது வாளுக்காகவா? முழுவதுமாக அகற்ற முடியவில்லையெனினும், புழுக்களைச் சிறிது சிறிதாகத் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருக்கிறேன்.

அகங்காரம் காதலியைப் பாதிக்காத வரையில், அது நம்முள் தங்கிக் கொள்வதில் ஒரு பிரச்சனையுமில்லை. தனித்திருந்தாலும் உடனிருந்தாலும் தாழ்வு மனப்பான்மை விஷம் கொண்ட நாகமே! துணையென ஆகிப்போனப்பின் துர்நாற்றம் வீசாமல் பார்த்துக்கொள்வதே நன்று. அகங்காரத்தை நசுக்கி அகங்காரத்தை ஒத்துக்கொள்வதே அதனை நசுக்குவதன் பயனாகும். காதலியின் புட்டத்தைத் தட்டினால் தாழ்வு மனப்பான்மை குறைந்துவிடுமல்லவா?


67 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page