ஜூலை 6
சரளமாய் ஓடிக்கொண்டிருந்த காம வெள்ளத்தில் கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த அடைப்புகளை நீக்க சம்பந்தப்பட்ட பெண்ணையே அணுக வேண்டிய நிர்ப்பந்தம். அதற்கான நாளினை குறித்துக்காட்டியபடி நாட்காட்டி காத்திருக்கச் சொன்னாலும், தடங்கலுக்குப் பயந்து விரைந்தேன். ஆனால் இம்முறை அவளுக்கு ஏற்பட்ட தடங்கல் காரணமாக அக்கதவுகள் திறக்கப்படவில்லை. அந்தக் கதவுகளைத் திறந்து நான் உள்ளே செல்வதற்குப் பதிலாக, அக்கதவுகளைத் திறந்து அவள் வெளியே வந்ததுதான் நடந்தது.
அகங்காரத்தின் புழு மீண்டும் மனமெங்கும் பரவத் தொடங்கியது. அவளறிந்திராத அத்தடங்கலை தெரியப்படுத்தாததின் விளைவில் எழுந்த அகங்காரம். ஊர்ந்துகொண்டிருக்கும் அது, அந்நாளைப் பாழாக்குமென யூகித்தேன். சொல்லப்போனால், அன்றைய தினத்தைப் பாழாக்கத் திட்டமிடவும் செய்தேன். ஆனால் வாழ்வில் முதன்முறையாகக் காதல் அகங்காரத்தை வென்று, கொன்றுபோட்டுள்ளது. தயக்கங்களின்றி கரங்கள் பற்றிய காதல் சம்பாதனை முதன்முறையாக அடையாறு வீதியில் தெரு விளக்கின் சாட்சியில் நடைபெற்றது. எனக்கு நேரெதிரே காணப்பட்ட தெருவின் முனையைச் சுட்டிக்காட்டியது குறி. வீதியின் ஓரம் சுட்டிக்காட்டப்படுவதை யாரும் அறிந்திராத வண்ணம், சங்கோஜத்தில் மறைக்க முற்பட்டேன்.
அங்கிருந்து நேரே இரவுணவைச் சுவைக்கச் சென்றோம். ஓர் முழுமையான இரவுணவு பேராசைக்காரனையும் போதாமையிலிருந்து மீட்டுவிடும். பெரும் ஏமாற்றத்தில் தொடங்கி, பெருமூச்சு விடும் மகிழ்ச்சியில் நிறைவடைந்த நாளின் இரவை இசையுடன் முடித்து வைத்தேன்.
ஜூலை 8
காலை அலுவலகப் பணியைத் தொடங்கும் சமயத்தில் மின்வெட்டு ஏற்பட்டது. அணில்கள் காரணமாக இருக்கலாம். தெருவில் ஒரு மரம் சரிந்திருந்தது. பணியைத் தொடர மடிக்கணினியை நாடி விஜய் வீட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் முழுதும் அவனுடன் நேரம் செலவழித்தேன்.
காட்சி வடிவத்தில் மூழ்கியிருந்த விஜய், தற்போது எழுத்து வடிவத்திற்குப் பழகத் தொடங்கியிருந்தான். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, சத்யஜித் ரேயின் சிறுகதைகள், மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை மாறி மாறிப் படித்துக்கொண்டிருந்தான். மேலும், இலக்கியம் சார்ந்து பதிவிடும் முகநூல் பக்கங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு ரெக்வஸ்ட் கொடுத்தான். இவ்வுலகிற்கு நுழையத் துடிக்கும் அவனது வேட்கையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
மதியம் என்னை மயிலாப்பூரிலுள்ள ரென்டிங் நூலகத்திற்கு அழைத்துச் சென்றான். ‘காடு’, ‘மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்’ மற்றும் ‘Women in Love’ ஆகிய புத்தகங்களை எடுத்தேன். மதியம் ஒரு விரைவுணவகத்தில் வெங்காய நெடியைப் பொறுக்க முடியாமல், ஒரு கேவலமான சிக்கன் ரைஸை சாப்பிட்டோம். பிறகு, மீண்டும் அலுவலகப் பணியைத் தொடர்ந்தேன்.
மாலை, அவன் தனது நண்பன் விக்கியின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். அதைக் கேட்டதும், என்றோ கேள்விப்பட்ட அர்ஜென்டினா சிறுகதை ஞாபகத்திற்கு வந்தது. கதை பின்வருமாறு:
விக்கிக்கு அவள்மீது கொள்ளை மோகம். எந்த அளவிற்கு எனில், அவள் சுகம் பகிர்ந்து பணம் பெறுபவள் என்று தெரிந்துமே, அது அவனது மோகத்திற்குத் தடையாய் இல்லாத அளவிற்கு! சொல்லப்போனால், விக்கிக்கும் அவளது உடலின் வாசத்தை ஒருதடவையேனும் நுகர்ந்துவிட வேண்டுமென்ற துடிப்பு. அதில் கொஞ்சமேனும் தனது விந்தின் மணத்தைக் கலந்துவிட வேண்டுமென்ற ஆசை. அவள்மீது விக்கிக்கு இருப்பது, வெறும் ஈர்ப்பு மிகுந்த அழகிய உடலை அடையும் வேட்கை மட்டுமல்ல; அதில் நிச்சயமாகக் காதல் இல்லாமலில்லை.
இந்த விருப்பத்தை அவன் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. ஏனெனில், அவனைப் போலவே அவனது நண்பர்களும் எப்படியேனும் பணம் சேர்த்து வைத்து அவளிடம் சென்றுவிட வேண்டுமென்ற விருப்பமுள்ளவர்கள். ஆனால் யாரும் இவனைப் போல நேசிக்கவில்லை. அவனது நண்பர்களின் ஒருவனான அன்புவிடம் இவள் மீதிருக்கும் பிரியத்தைச் சொன்னான். அதற்கு அவன், ‘இந்த ஐட்டம் மேலயா? டேய், எங்கப்பன் பாக்கெட்ல இருந்து காசு வேணா திருடி எடுத்தாந்து தரேன். போய் ஓத்துட்டு வா, இல்லைன்னா நானும் வரேன். அதுக்குன்னு லவ்வு கிவ்வுன்னு…” என்றான். அன்பு போன்றவர்களைப் பொறுத்தவரையில், காதல் என்பது ஒரு ஃபார்முலா. அது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும். நேர்கோட்டில் பயணிக்க வேண்டும். க்ளைமாக்ஸ் என்பது சோகமானதாகத்தான் இருக்க வேண்டும்; அதாவது அந்தக் காதல் கல்யாணத்தில் போய் முடிய வேண்டும். அப்போதுதான் அது அர்த்தமுள்ள உறவாகும். அவனிடம் பகுதி நேர பாலியல் தொழில் செய்யும் தேவதையின் மீதிருக்கும் காதலைப் பற்றிச் சொன்னால் என்ன புரிய போகிறது?
விக்கி அவளைத் தினமும் பேருந்து நிலையத்தில் காத்திருந்து பார்ப்பான். தினமும் யாராவது ஒருவன் வந்து அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வார்கள். அதனால் அவள் பாலியல் தொழிலாளி என்பது அப்பகுதியிலிருக்கும் எல்லா ஆண்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும். ஒருபுறம், ‘ஏன் இப்படிப் பொது இடத்தில் எல்லோருக்கும் தெரியும் வகையில் செய்ய வேண்டும்?’ என்று விக்கி யோசிப்பதுண்டு. ஆனால் பொது இடம்தான் அவளுக்கு விளம்பரம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. விக்கி ஏன் இதற்கு இவ்வளவு கவலைப்பட்டான் எனில், எதிர்காலத்தில் வாய்ப்பிருந்தால் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளக்கூட அவன் தயங்கவில்லை. நான்கு பேர்களுடைய வார்த்தைகளை வாங்க வேண்டி இருக்குமே என்ற எண்ணத்தில்தான் இந்தப் பொது இட விஷயத்தைப் பற்றி ரொம்ப யோசித்தான்.
விக்கியிடம் அவளது வாட்ஸ்-அப் எண் இருந்தது. அப்பகுதியிலிருக்கும் எல்லா ஆண்களிடமும் இருந்தது. அவளிடமும் எல்லா ஆண்களின் எண்களும் இருந்தது. யாராவது ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாலே அவள் அதனை ‘கஸ்டமர்’ என்று சேவ் செய்துகொள்வாள். அவள் போடும் ஸ்டேடஸ்களை விக்கி தினமும் பார்த்துவிடுவதுண்டு. அதில் அவளது Schedule, Appointment குறித்து அனைத்து விஷயங்களும் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும். மேலும், ஆண்களை டெம்ப்ட் செய்யும் வகையில் காஜி ஸ்டேட்ஸ்களையும் தெறிக்க விடுவாள். என்றேனும் ஒருநாள் அவள் கலவி கொண்டிருக்கும்போது அவள் மோன் செய்யும் சத்தத்தை மட்டும் ஸ்டேட்டஸில் போடுவாள். இவை எல்லாம் அதிக கஸ்டமர்களை ஈர்க்கும் ஒரு முறையாகும்.
விருப்பமில்லாதவர்களைக்கூட, இவளது ஸ்டேடஸ் கவர்ந்திழுத்துவிடும். எப்படி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் விளம்பரங்களின் மூலம் நமக்குத் தேவையற்ற பொருட்களை வாங்க வைக்கிறதோ அதுபோல. அப்போதுகூட விக்கி அவளை புக் செய்யவில்லை.
பிறகொரு நாள் அவள் இவ்வாறு ஸ்டேடஸ் போட்டிருந்தாள் : ‘இன்னைக்கு நைட் ஃப்ரீயா இருந்தா book me. ஆனால் மேட்டருக்கு இல்லை. இன்று யாருக்காவது எனக்குச் சாப்பாடு ஊட்டிவிட வேண்டும் போல் இருந்தால் அவர்கள் மட்டும் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்புங்க. சாப்பிட்டுவிட்டு உங்க மடில தூங்கிக்கிறேன்’
உடனே விக்கி அனுப்பினான். அவள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கேட்டுப் பெற்ற அவளது அன்பும், கேட்காமலே கொடுத்த விக்கியின் காதலும் இன்று சேர்ந்த அந்தப் பொழுது, அவளே எதிர்பாராத விதமாக அவர்களைக் கலவிக்குள் இழுத்தது.
விக்கி அவளது உடலின் ஒவ்வொரு இன்ச்சையும் அனுபவித்தான். இதுவரை அவளை யாரும் செய்திராதது போன்ற சாஃப்ட் செக்ஸை செய்தான் விக்கி. அது அவளுக்கு ஒருவிதமாகப் புதிதாக இருந்தது. எல்லோரும் ரஃப்ஃபாக செய்துகொண்டிருந்தபோது, இவன் மட்டும் புதிதாகச் செய்தது அவளுக்குப் பக்கத்து வீட்டாரின் சாப்பாட்டைச் சாப்பிட்டது போல இருந்தது.
கலவி முடிந்தவுடன் விக்கி சொன்னான்,
“நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா? இதை இந்த மொமென்ட்ல சொல்லனும் எவ்ளோ நாள் வெயிட் பண்ணேன் தெரியுமா? உன்னோட வாட்ஸ் அப் டிபிய பார்த்து நிறைய நாள் கை அடிச்சிருக்கேன். மத்தவங்க உன்னப் பாக்குற மாதிரி நான் உன்னப் பார்க்கலை. நான் சின்னப் பையன். ஒரு 26 ஆனதுக்கு அப்புறம் உனக்கு விருப்பமிருந்தா உன்னைக் கல்யாணம் கட்டிக்கக்கூடத் தயாரா இருக்கேன். இது ப்ரெபோஸ்லாம் இல்ல. இந்த அழகான நேரத்துல இதையெல்லாம் சொல்லனும்னு யோசிச்சு வெச்சிருந்தேன்”
அதற்கு அவள் தனது தலை முடியைச் சரி செய்துகொண்டே இவனை ஓரப்பார்வை பார்த்தபடி சொன்னாள், “ஹ்ம்ம்... எல்லாரும் இதான் சொல்றீங்க”
ஜூலை 15
கடந்த காலத்தின் பிழைகளும், அதனை நினைவுபடுத்தும் நபரால் ஏற்படும் குற்றவுணர்வும் வாட்டிய வண்ணம் இருக்கின்றன. போதாக் குறைக்கு, மறக்க நினைக்கும் கசப்பான சம்பவங்களும், துருப்பிடித்துப் போன ஆசைகளும் விடாமல் துரத்திக்கொண்டிருக்கின்றன. அலுவலகப் பணிகளின் யோசனைகள் இரவிலும் எழுகின்றன. இதற்கிடையில் ஆதவனின் ஒன்றிரண்டு கதைகளைச் சாக்லேட் போலச் சுவைத்துக்கொண்டிருக்கிறேன். தேவையற்ற எதிர்கால யோசனைகள், இயலாமைகள், அடைப்புகள், கட்டுப்படுத்த இயலா காம இச்சைகள் என அனைத்திற்கும் இடையில் இந்நாளை உயிர்ப்புடன் வைத்திருந்தது அவளது காதலின் நிரூபணம் மட்டுமே. அதையுமே முழுமையாகச் சுவைக்க முடியாதபடி, குறிப்பிட்ட பிறவற்றை அனைத்தும் சுற்றி நின்று வெறித்துப் பார்க்கின்றன.
ஜூலை 17
சுதந்திரமாக இல்லாததிற்காக, இல்லத்தைச் சார்ந்திருப்பதற்காக அவமானப்படுத்தப் படுகிறேன், நிராகரிக்கப்படுகிறேன். எனது ஆண்மை குறித்த கேள்வி இந்தச் சுதந்திரத்தின்மீது எழுகிறது. அசரவில்லை. சுதந்திரமாக இருப்பதற்கும் சுதந்திரமாக உணர்வதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன என்பதை நன்கறிவேன். இன்றிரவுகூட ஸ்ரீனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் செல்கிறேன். இதற்காக எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. என்னை நானாக இருக்க விடுவதை எந்த நிபந்தனைகளும் தடுக்கவில்லை; காதலைத்தவிர.
முதன்முறையாகக் காதலின் ஓர் அங்கம் நீர்த்துப்போகிறது. காதலின் நிரூபணங்களை மட்டுமே அளித்துக்கொண்டு, அதனை மட்டுமே எதிர்பார்க்கும் கோமாளி ஆகியிருக்கிறேன். இன்னும் நிரூபிக்க எவ்வளவு விஷயங்கள் மிச்சமிருக்கின்றன? காதலை, காமத்தை, சுதந்திரத்தை, நம்பிக்கையை… இன்னும் ஏராளம்…
‘நான் சுதந்திரமானவன்’ என்பதைக்கூட நிரூபிக்கத்தான் வேண்டுமெனில், நிரூபித்துக்கொண்டேயிருக்கும் அற்ப விஷயத்தைக் கைவிட வேண்டும்.
ஜூலை 18
வாழ்க்கையில் 2வது முறையாக ஓர் இரவு முழுதும் உறங்காமலிருந்தேன். ஸ்ரீனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நிறைவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்குமெனத் துளியும் நினைக்கவேயில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பாகத்தான் இருந்தது. 12 மணிக்கு ஸ்ரீனியும் நண்பர்களும் ஒன்றுகூடிய பிறகு நாங்கள் ஐக்கியமாகினோம்.
வர்ஷாவை எனக்குக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகத் தெரிந்திருந்தாலும், இன்று பகிர்ந்துகொண்டது போன்ற ஒரு நட்பையோ அந்தரங்கத்தையோ நாங்கள் என்றுமே பகிர்ந்துகொண்டதில்லை. அவள் எனது காதல்கள் குறித்துக் கேட்டாள். நான் வெளிப்படையாகப் பேசியதாலேயே அவள் தனது கடந்த காலத்தை என்னிடம் சொல்லத் தொடங்கினாள். இந்த சம்பாஷனையை என்னிடம் நிகழ்த்த அவளுக்குப் பெரும் தயக்கமிருந்திருக்கிறது. எனக்கு அவளுடன் இன்னும் நிறையப் பேச வேண்டும் போல் இருந்தது.
திட்டமிடலின்றி, நள்ளிரவு இரண்டு மணிக்கு அனைவரும் பிரியாணி கடையைத் தேடிச் சென்றோம். ஆனால் எங்களுக்குக் கிடைத்ததென்னவோ டீ கடைதான். இருந்தாலும், அதிகாலையில் முட்டை தோசையும் கலக்கியும் சாப்பிடுவதில் சுகம் இல்லாமலில்லை.
எங்கள் கூட்டத்தில் ஒரு கிறுக்கன் இருந்தான். ஒரே பெண்ணை வெவ்வேறு காலங்களில் காதலித்த இரண்டு ஆண்களை (நண்பர்கள்) கேலி பேசும் கிறுக்கன். அவனது பிம்பம் வெளிப்பட்டதும் அவன் மீதிருந்த மரியாதை வற்றிவிட்டது. இத்தனைக்கும் அவன் தனது வீட்டில், தான் முரகாமி படிப்பவனாகக் காண்பித்துக்கொண்டான். அந்தப் புத்தகத்தை உருப்படியாகப் படித்திருந்தாலே இந்த எண்ணம் மாறியிருக்கும். அப்போதுதான் அவன் கதைகளைப் படிப்பவனல்ல; வார்த்தைகளை மட்டுமே படித்து இன்ஸ்டாகிராமில், தான் மிரகாமி வாசகன் என்று வெளிப்படுத்திக்கொள்பவன் என்பதை அறிந்தேன்.
அங்கிருந்து நாங்கள் ஒரு கடற்கரைக்குச் சென்றோம். அந்தக் கடற்கரையின் பெயர் தெரியவில்லை. ஆனால் இந்தத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தின் அதிகாலையில், சென்னையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரே கடற்கரை அதுதான். நினைத்துச் சிலிர்க்கும் உணர்வுகளை அந்த இடம் ஏற்படுத்தியிருந்தாலும், ரொமான்டிசிசம் எழுதுவதைக் குறைத்துக் கொள்ள முடிவெடுத்த காரணத்தால் மேற்கொண்டு வர்ணிக்க விரும்பவில்லை.
வீடு திரும்புவதற்கு முன்பு, இந்நாளின் மிகச்சிறந்த கணத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. முரகாமியின் ‘Men without Women’ கதைகள் என் கண் முன்னே நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த இரண்டு பையன்களும், அதாவது ஒரே பெண்ணை வெவ்வேறு காலங்களில் காதலித்த இரண்டு பையன்களும் என்னிடம் அவர்களது காதல் வாழ்க்கையின் க்ராஃபைச் சொல்லிக்கொண்டிருந்தனர். இந்தக் கிறுக்கன் வாழும் அதே காலகட்டத்தில், இவர்கள் எவ்வளவு பக்குவமானவர்களாகச் சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர் என்ற வியப்பில் ஒரு நீண்ட அறிவுப்பூர்வமான மற்றும் உணர்வுப்பூர்வமான உரையாடலை அவர்களிடம் நிகழ்த்தினேன்.
ஜூலை 23
அவளைக் காதலித்த ஒருவனுக்கு அவளிடமிருந்து கிடைத்த அனுதாபம்கூட, அவளால் காதலிக்கப்பட்ட எனக்குக் கிடைக்கவில்லை. ஏனோ காதலிருக்கும் இடங்களில் வெளிப்படும் அதீத நிர்வாணத்தன்மை ஒருகணம் திக்குமுக்காடச் செய்துவிடுகிறது. ஒரு பிரிவை மேற்கொள்ளும்போது, மனம் நோகாதபடியும், அவமானப்படுத்தாமலும் வழியனுப்பி வைக்கலாம். உறவின் முறிவு இவ்வளவு அழுக்காக இருக்க வேண்டாம் என்பதுதான் ஒரே கவலை. ஆனால் வெளிப்படைத்தன்மை இருக்கும் எந்த இடத்திலும் பிரிவுகள் மென்மையாக அமைவதில்லை. அதனாலேயே அதிகமாகக் காதலிப்பதில்கூட ஏற்படாத தயக்கம், அதீத நிர்வாணமாக இருக்க வேண்டிய இடத்தில் ஏற்பட்டு விடுகிறது.
ஜூலை 27
பெரும் சோகத்தில் மூழ்கியிருப்பவனை மீட்பதற்காகத் தேவதைகளால் அனுப்பப்பட்டவளைப் போல் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருந்தாள் ஆழி. சில நாட்களுக்கு முன்பு அவள் எனக்கு மிகவும் தேவைப்பட்டாள். அவளிடம் ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்தோஷமாகப் பேசினேன். கடந்த முறை பேசியபோது என் குரலில் தென்பட்ட சோகத்தை உடனே கண்டுகொண்டாள். அது அவளுக்குப் புதிதாக இருந்திருக்கும். எனக்கே எனது சோகம் புதிதாகத்தான் இருந்தது. நான் சோகத்திலிருப்பது அபூர்வம்.
இம்முறை எனது மனநிலை குறித்தும், உடல்நிலை குறித்தும் ஆர்வம் மிக அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவள் எனது பக்கத்து வீட்டுக்காரியாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றேன். அவளுக்கு அதில் விருப்பமில்லை. ஏனெனில் அவள் என்னிடம் பேசுவதற்காக விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமிப்பதாகச் சொன்னாள்; ஒரே கடிதத்தில் நடந்தவை அனைத்தையும் அடக்க விட வேண்டும் என்று நினைக்கும் நாஸ்டால்ஜியா நபர்களைப் போல. இந்தக் கண்ணோட்டத்தில் அவளை நான் ஒருமுறைகூட யோசித்ததில்லை. ஆனால் அவள் என்மீதிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தியதை நினைத்துச் சுகங்கண்டேன்.
நாம் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் தொலைவிலாவது இருந்திருக்கலாம், ஆழி!
*
திருமணத்தின் மீதிருக்கும் அவநம்பிக்கையை வென்றுவிட வேண்டுமென்ற பல முறை நினைத்திருக்கிறேன். அதற்காக என் கொள்கை, எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றை விட்டுக்கொடுக்கவும் செய்திருக்கிறேன். ஆனால் காலம் அதைச் சாத்தியமற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது. இதுவரை திருமணம் மீதிருக்கும் நன்மைகள் என 0.0001% கூட என்னால் உணர முடியவில்லை. கண்களைத் திறந்து பார்த்தாலும் கடவுள் தெரியவில்லையெனில், எப்படிச் சாமியைக் கும்பிட மனம் வரும்?
*
குடும்பப் பிரச்சனையின்போது பெற்றோரின் இரைச்சலைச் சகிக்க முடியாமல் அழுதுகொண்டே வருண் என்னைத் தேடி வந்த காட்சி கண்களை விட்டு அகலாமல் உள்ளது. இறைவனே, அவன் இன்னொரு பாலுவாக ஆகிவிடக்கூடாது.
ஜூலை 29
ஜே.பி.சாணக்யாவின் ‘முதல் தனிமை’ என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் ‘மாறுவேடம்’ என்ற ஒரு கதை உண்டு. அந்தக் கதையின் இரு பெண் கதாபாத்திரங்கள் என்னை ஈர்த்தனர். இருவரும் திருமண உறவிலிருந்து வெளியேறியவர்கள். அக்கதையின் பிற கதாபாத்திரங்கள் சமூகத்தின் உவமையாகத் தோன்றி, அந்த இரு பெண்களிடமும் அவர்களது பிரிவுக்கான காரணத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அந்த இரு பெண்களும் ஒரே மாதிரியாக வெவ்வேறு காலகட்டத்தில் தங்களது பிரிவு குறித்து ஒரு வாரத்தைக்கூடப் பேச மாட்டார்கள். நானும் இவர்களது பிரிவுக்கான காரணம் கதையின் இறுதியில் சொல்லப்படும் எனக் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் கடைசி வரையிலும் அதன் மர்மத்தின் முடிச்சு அவிழவேயில்லை.
கதையை வாசித்து முடித்ததும் அப்படிப் பிரிவில் என்னதான் இருந்திருக்குமென யோசித்தேன். அவர்களது வாழ்க்கையில் மட்டுமல்ல; பலரது வாழ்க்கையிலும் பிரிவில் இரண்டு முக்கிய விஷயங்கள் பிரதானமாக உள்ளன. அவை நிராகரிப்பும், அவமானமும். சம்பந்தப்பட்ட இரண்டு பேரில் யாரேனும் ஒருவர் இந்த நிராகரிப்பையும், அவமானத்தையும் அனுபவிப்பவர்களாக உள்ளனர். அவர்களே இந்தப் பிரிவினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மேலும், பிரிவைக் குறித்து ஒருவர் பொதுவெளியில் உரையாட நேர்ந்தால், அதில் யாரேனும் ஒருவராவது கெட்டவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். விளக்குபவர்களது நோக்கம் மற்றொருவரைக் கெட்டவராக்க வேண்டும் என்பதாக இருக்காது எனினும், அது கேட்பவர்களிடையே அப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை உருவாக்கும். இதனால்தான் இந்த இரு பெண்களும் பிரிவைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். தனது இழப்பைச் சொல்லி ஆறுதல் தேடி தன்னை மீட்டுக்கொள்ளும் காலகட்டத்தில் இதுபோன்ற கதையைப் படிக்கும்போது கொஞ்சம் விசித்திரமாகவே உள்ளது. ஒருவேளை ‘ஏன் பிரிந்தீர்கள்?’ என்பதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதை மறைப்பதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும். நாம் செய்த தவறு வெளிப்பட்டு விடக்கூடாது என்ற சுய அகங்காரம்; அல்லது தனது முந்தைய துணையின் குணாதிசயம் சிதைந்துவிடக்கூடாதென்ற நல்ல எண்ணம். எப்படி இருந்தாலும் இவர்கள் இருவரும் செய்யாமல் இருந்த காரியம் மிகச் சிறப்பானது. It’s time to learn the Art of not opening up about break ups.
Comments