ஜனவரி 16, 2021
கல்லூரி சீனியர் நண்பரைச் சந்தித்தேன். ஒன்றரை மணி நேரமாக ரஷ்ய இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் கொஞ்ச நேரத்திற்கு முன் அவர் தன் காதல் முறிவைப் பற்றிச் சொன்னார். அவருக்கு இது மூன்றாவது காதலெனக் குறிப்பிட்டார். ‘தொடர்ந்து மூன்று காதல்கள் முறிவாவதால் என்மீதுதான் தவறு உள்ளதோ’ என்று தன் கையாலாகத்தனத்தை வெளிக்காட்டுவது போல் சொன்னார். எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. அவர் தன்னம்பிக்கை குறைவாகப் பேசி இதுவரை கண்டதில்லை. எனக்கு அவரிடம் சொல்வதற்கு ஒன்று மட்டும்தான் இருந்தது :
‘
‘இருப்பதிலேயே ஒன்றுக்கும் உதவாது உணர்வென்பது தாழ்வு மனப்பான்மையில் வரக்கூடிய விசனம். தற்போது காதலிப்பவர்கள் அனைவரும் ஆண் - பெண் உறவில் நிகழ்ந்திருக்கும் கால மாற்றத்தை உற்று நோக்க வேண்டும். நம் பெற்றோர் காலத்திலெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று ஓர் உறவு சரியாகச் செல்லவில்லையெனில் அதிலிருந்து வெளியேறுவதற்கான சுதந்திரத்தை ஆண், பெண் இருபாலரும் எடுத்துக்கொண்டனர். எனவே பிரிவை ஏற்றுக் கொள்வதன்றி வேறு வழியில்லை. அவ்வகையில், நாளை உங்கள் காதலிகூட நான்காம்/ஐந்தாம் காதல் உறவிற்குள் சென்று அதிலிருந்து பிரிந்து வரலாம். அதற்காக அவர் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதில் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லையே! நீங்கள் அழலாம், எவ்வளவு வேண்டுமானாலும். ஆனால் இந்தத் தாழ்வு மனப்பான்மையைக் கொன்று விடுங்கள்.’
ஜனவரி 17, 2021
குறுஞ்செய்தியில் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘மான்ஹாட்டனில் பிறந்திருந்த வேண்டியவன்’ என்று அவன் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டான். ஆனால் அவனுக்குக் கிடைக்கப் போகும் துணை கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டுமாம். ‘இப்படியிருந்தால் எப்படி மான்ஹாட்டனில் வாழ முடியும்?’ என்றேன். ‘வேறு ஒருவனுடன் கொண்டிருந்த கலவியைச் சொல்லி விட்டால் பிரச்சனையில்லை. மறைப்பதில்தான் சிக்கல் உண்டாகிறது. மான்ஹாட்டனில் பெண்கள் உடலுறவு வைத்தால் அதைச் சொல்லி விடுவார்கள்’ என்றான்.
மான்ஹாட்டன் ஆண்கள் பெண்களின் கடந்த காலத்தை எதிர்கொள்ளும் விதமும், இந்தியர்கள் எதிர்கொள்ளும் விதமும் முற்றிலும் வேறு. ‘முன்பு கொண்டிருந்த கலவியைச் சொல்லி விட்டால் பிரச்சனையில்லை’ என்றவாறு ஒருவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போதே, அவன் திரை கிழிந்து பிரச்சனைக்குரிய நபராக மாறி
விடுகிறான். பெண்ணின் உடல் குறித்து இவ்வளவு யோசனைகள், எதிர்பார்ப்புகள், மனக் குழப்பங்கள் கொண்டிருக்கும் ஒருவனால் எப்படி அவளது கடந்த காலத்தை எளிதாக உதறிவிட்டுக் கடந்து செல்ல முடியும்? ஒருவேளை அப்பெண் தன் நிஜத்தைச் சொன்னாலும், இவன் அவளைப் புணரும்போதெல்லாம் ‘இந்த யோனியில் வேறு சில குறிகளும் செலுத்தப்பட்டிருக்கின்றன’ போன்ற யோசனைகள்தானே தோன்றும்! முராகமி சிறுகதையில் உலாவிக் கொண்டிருக்கும் ஆண்களிடம் காணப்படும் பிரச்சனை இவனிடமும் உள்ளதோ என்று தோன்றுகிறது.
ஜனவரி 18, 2021
அப்பா இரவுணவு சாப்பிட்டதும் படுக்கைக்குச் சென்றார். அவருக்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றேன். அப்போது அவர் முணுமுணுத்தபடி தனக்குள் பேசிக் கொண்டார்.
”என் வாழ்க்கையில் நிம்மதிங்கிறதே எனக்கு இல்லாம போச்சு”
இன்று அவருக்கு முப்பதாம் ஆண்டு திருமண நாள்.
Comments