பாலுவிற்கு,
முன்பனிக்காற்றில் கோதைக்குரல் காதைத் தொட்டழைத்தால் எப்பேர்ப்பட்ட ஆணிற்கும் காதல் வரும். பள்ளிப்பருவ காதல் நினைவுகளை வருண் - சங்கீதாவின் உரையாடல்கள் பாலைவனத்தில் தொலைந்து போனதுபோல் நினைவுகளால் நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.சுற்றிலும் மனிதர்கள் இருந்தும் ஏதோ ஒன்றிற்காக ஏங்கி, இல்லாத தனிமையில் வாடும் எனை போன்றவர்களுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. கொடுத்த முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் நடக்கும் பிரிவு, கட்டுப்பாட்டுக்குள் இல்லாததால் நடந்த நிகழ்வுகளை நினைத்து புன்முறுவலிட்டு கடக்க வேண்டியதுதான். அவசர உலகில் 'எனக்கு யாராவது கடிதம் எழுதுவார்களா!' என்ற ஆசை உண்டாகிறது. வருணை மட்டுமல்லாமல் சங்கீதாவையும் நெருக்கமாகவும் உன்னிப்பாகவும் கவனிக்க முடிகிறது. இரு கதாபாத்திரங்களும் முற்றிலும் இயல்புத்தன்மை நிறைந்தவை. என் வாழ்வில் நான் கண்ட சங்கீதாவிற்கு இந்தப் புத்தகத்தை பரிசளிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
நீண்ட நாட்களாய் என்னுள் இருந்த ஓர் ஏக்கம் 'நெஞ்சோரம் சஞ்சாரம்' பகுதியுடன் தீர்கிறது. 'ஒரு பெண்ணின் மனமுடைதல் எவ்வாறு இருக்கும்?' என்ற கேள்வி எனக்குள் இருந்துக்கொண்டே இருந்தது. இவள் கதையின் மூலம் கண்டுக்கொண்டு விட்டேன். நமக்கு பிடித்தமானவர்களுடன் இருக்க ஒரு வெளியிடையை உருவாக்கிக் கொள்ள முயலும்போது நடக்கும் கூத்துகள் அனைத்தும் இயல்பு மாறாமலிருக்கிறது. அந்தக் குறுகிய நடைப்பயணத்தையும் சிறிது நீட்டிக்கப்பட்ட இருசக்கர வாகனப் பயணத்தையும் படிக்கும் என்னை தன்னிலை மறந்து இளிக்க வைக்கிறது. கல்ச்சுரல்சுக்கு பின் நடக்கும் உரையாடல், நீண்ட நேர எதிர்பார்ப்பிற்கு தீனி போடுவதுபோல் இருக்கிறது. இனி என்னால் 'எங்க போன ராசா' பாடலை சாதாரணமாகக் கேட்கவியலாது. இவளும் நித்யானும் கண் முன் வந்து நிற்பார்கள். பிரிவுக்குப்பின் பேருந்து நிறுத்தத்தில் நடக்கும் சந்திப்பு எதிர்பாராதது. நித்யானுக்காக நானும் அவளுடன் சேர்ந்தே காத்திருந்தேன்.
'துக்கத்தை நேசிப்பதால் நேசத்தை தொலைப்பதா!' இந்த வரியை படித்ததும் புத்தகத்தை அரைமணி நேரம் மூடி வைத்துவிட்டேன். விமலா வருணிடம் கல்யாணம் குறித்து தரும் விளக்கம் கேட்பவர் யாவருக்கும் ஞானக்கண்ணை திறந்துவிடும். புத்தகக் கண்காட்சியில் வருண் மட்டுமல்ல; நானும் லீலாவிற்கு விழுந்துவிட்டேன். அனைத்து கதாபாத்திரங்களும் மிக எளிமையாய் இருப்பதனாலேயே அவர்களை எளிதாக புரிந்துக்கொள்ள முடிகிறது. லீலா - வருண் உரையாடல்களை எத்தனை முறை படித்தாலும் படிப்பவர்களுக்கு அத்தனை முறையும் நிறைவைத் தரும். பிரிவு அழகானது, அதில் வருத்தப்பட ஒன்றுமில்லையென உணர்த்தியதற்கு நன்றி. எழுபத்து எட்டு பக்கங்கள் படித்த கதையை மொத்தமாக ஒரு படி மேலே உயர்த்துவது கிருபா - விமலா உரையாடல். முற்றுப்புள்ளி வைக்காமல் முடித்தது மேலும் சிறப்பு. கால வெளியிடைக்கு நன்றி. மேலும் பல புத்தகங்களையும் கவிதைகளையும் எழுது. அதன் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கும்...
ஸ்ரீனிவாசன்
11/11/19
நன்றி பாலு !
பேரன்புள்ள ஸ்ரீனிக்கு,
உனக்கு கடிதம் கிடைக்க வேண்டும் என்பதனாலேயே நான் இதனை உனக்கு எழுதுகிறேன். இதைக் கூட என் வாசகனுக்கு நான் செய்யவில்லையெனில் நான் என்ன நண்பன்? சொல்! முதலில் இந்தக் கதையை ஒரு நாவல் வடிவமாக்கும் யோசனையை சொன்ன உமக்கு பெரிய நன்றி ஒய்.
சுற்றிலும் மனிதர்கள் இருந்தும் ஏதோ ஒருவருக்காக ஏங்காமல் ஏதோ ஒன்றிற்காக ஏங்குவதாக உன் எழுத்தில் தெரிகிறது. காதல், மனிதர்கள் மீதுதான் வர வேண்டுமென்று எந்த நிபந்தனையும் இல்லையென்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாய். எழுதினாய் பார், 'இல்லாத தனிமையில் வாடும்' என்றொரு வரியை. உண்மையில் தனிமை என்று எதுவும் இல்லை. இருந்தாலும், அது நம்மை தீண்டுவதில்லை; நாம் தான் அதை தேடிச் செல்கிறோம். என்றேனும், மீண்டும் உன் மனம் அதனை நாடிச் சென்றால், என்னிடமிருந்து இன்னொரு 'கால வெளியிடை' புத்தகத்தை வாங்கிச் சென்று உன் சங்கீதாவை சந்தி.
'நெஞ்சோரம் சஞ்சாரம்' பகுதியில் உன் ஏக்கம் நிறைவடைந்ததை எண்ணி மகிழ்கிறேன். காதல் என்ற வானில் பெண்ணின் மனமுடைதல் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம். அவளுக்கு புலம்புவதற்கென்று ஏதுமில்லை. அதனாலேயே அதன் ஆழம் கூடுகிறது.
பிரிவு அழகானதுதான்; கவித்துவமாக காதலிக்கும்வரை. கவித்துவமாக காதலிப்பவனால் தன் காதலை நித்ய உறவுக்குள் கொண்டு செல்ல முடியாது. அதனால் அதில் பிரிவு என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஆகிறது. கவி என்பதே கடப்பதிற்குத்தானே! ஆனால், அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை என்றல்ல. நான் வருத்தப்படாமல் இருந்திருந்தால் இந்நூல் பிறந்திருக்காது. கண்ணீர்தான் உன் எழுதுகோலின் மை. எனவே, அழுவதை நிறுத்தாதே. ஏனென்றால், அழுதல் என்பதொரு தியான நிலை.
பாலுவும்
பிரியமும்
Comments