நவம்பர் 7
இது அடுத்த புத்தகம் குறித்த அறிவிப்பு அல்ல; இது நான் எழுத நினைக்கும் நாவல் பற்றிய குறிப்பு. 2023ம் ஆண்டின் இறுதியில் ஒரு நாவல் வெளியிடும் கனவு உள்ளது. அதுவரை நான் அதனுடன் இணைந்து பயணிப்பேனா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் எனது இளம் வயதிலேயே அந்த நாவலை எழுதிவிட வேண்டுமெனத் தோன்றுகிறது. நிச்சயம் அது காதல் நாவலல்ல. இன்னும் தலைப்புகூட வைக்கவில்லை. என்ன கதையென்றும் முடிவு செய்யவில்லை. ஆனால் எதைப் பற்றி எழுதப்போகிறேன் என்பதில் மட்டும் தெளிவாக உள்ளேன். நான் எழுதப்போகும் விஷயம் குறித்த பல தகவல்கள் எனது மூலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அது ஒரு பாரமாக உள்ளது. அந்தப் பாரத்தை ஒரு கலை வடிவில் இறக்கி வைத்துவிட்டால் எனக்கு நேர்ந்த தீங்கை எண்ணிக்கூட மகிழ்ந்துகொள்ளலாம். பாரத்தை இறக்கி வைப்பதால் நிச்சயம் அழுது வடியும் நாவலாக இருக்காது. அதேசமயம் இது ஹெடோனிச நாவலாகவும் இருக்கப்போவதில்லை. அதீத துயருக்கும், அளவோடுள்ள இன்பத்திற்கு இடையே பயணிக்கும் ஒரு நாவல். கிட்டத்தட்டக் கத்தி மேல் நடக்கும் கதை. இதை எழுதி முடித்த பிறகு, செதுக்குதவற்கு எனக்கு ஓராண்டு தேவை. ஆனால் எழுதும் பணியைத் தொடங்குவதற்கு முன்பு நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்ய வேண்டியுள்ளது. அது என்னவெனில், எனது உடம்பை Reboot செய்வது. அதைச் செய்தால் மட்டுமே நான் இந்த நாவலை எழுத முடியும். Reboot செய்யாமல் இந்நாவலில் ஒரு எழுத்தைக்கூட எழுத முடியாதென்பது எனக்கு நானே இட்டுக்கொண்ட விதி.
உடலை Reboot செய்வதில் தொடர்ந்து தோல்வியடைந்துகொண்டே இருக்கிறேன். ஒரு வாழ்க்கைமுறையையே தியானமாகக் கொள்வதென்பது எவ்வளவு கடினம் எனப் புரிகிறது. இதை இன்றிலிருந்து தொடங்கினால்கூட முழுமையாகப் புத்துயிர் பெறுவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் எனது உடலில் ஒரு சொட்டு நஞ்சு கலந்தால்கூட எனது கனவுப் புத்தகம் தாமதமாகிக்கொண்டே போகும். இளமையில் பெரிதும் மதிக்க வேண்டியது நமக்கிருக்கக்கூடிய நேரமும், ஆரோக்கியமும். இதைச் செய்யவில்லையெனில் இரண்டும் கெடும். அடுத்த சில ஆண்டுகளுக்கு நான் கவனம் செலுத்த வேண்டியது ஒன்றில் மட்டும்தான்; உழைப்பு. ஒரு மிகப்பெரிய உழைப்பைப் போட்ட பிறகுதான் ஒரு நாவலையே எழுத முடியுமென்ற நிர்ப்பந்தத்தை எனக்கு நானே வகுத்துக்கொண்டேன். அதை எழுதும்போது இலக்கிய ரீதியான உழைப்பு தேவை. சமீப காலங்களில் எனது உடலை மிகவும் வருத்திவிட்டேன். அது இப்போது என்னிடம் தன்னை விட்டுவிடச் சொல்லி மன்றாடுகிறது. மனம் அதைக் கேட்டாலும் தொடர் தோல்வியிலிருந்து நான் புரிந்துகொள்வது என்னவெனில், நான் அதற்கு எவ்வளவு அடிமையாகியிருக்கிறேன் என்பதே. பாலு ஓர் அரசனாக வாழ்ந்தான். யாருக்கும் இல்லையெனினும் அவனுக்காவது. இப்போது அவன் சமயங்களில் தன்னை எண்ணிக் கூசிப்போகிறான். இதை உலகிடம் ஒத்துக்கொள்ள வேண்டிய தேவை அவனுக்குள்ளது. தனது பலவீனத்தை உலகிடம் தெரியப்படுத்திவிட்டு எந்தவொரு குழப்பங்களும் இல்லாமல் ஒரு போரில் காலடியெடுத்து வைக்க வேண்டிய தேவை அவனுக்குள்ளது. யாருடைய வாழ்த்துகளும், ஊக்கமும் அவனுக்குத் தேவையில்லை. தனது பலவீனங்களைப் பிறரிடம் தெரியப்படுத்தாதபோது மனிதன் தனிமையாக உணர்வதாக ஓர் உலக இயக்குநர் பேசிக்கேட்டிருக்கிறேன்.
என் உடலைக் கட்டுப்படுத்துவதன்மூலம் நான் என் மனதையும் கட்டுப்படுத்த முடியும். கூர்ந்து கவனிக்க வேண்டிய தேவையற்ற ஒரு தியான முறை பிரபஞ்சத்தில் ஒன்று உண்டெனில், அது இதுவே. நாட்களை எண்ணி இதில் ஈடுபடுவது என்பது இனி ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. தன்மீட்சிக்கான படகு வந்துவிட்டது. துடுப்புடன் தயாராக இருக்கிறேன்.
நவம்பர் 9
ஒரு திருமணமான தம்பதி குறித்துக் கேள்விப்பட நேர்ந்தது. மனைவி மீது கணவன் சந்தேகம் கொள்ளத் துவங்குகிறான். இதனால் அவர்களது உறவில் சில நாட்களது கசப்பு உண்டாகி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. சில நாட்கள் கழித்து கணவனுக்கு மீண்டும் சந்தேக உணர்வு தோன்றுகிறது. அவர்களுக்குள் இரவெல்லாம் சண்டை நடக்கிறது. மறுநாள் காலை மனைவி சமைக்க நேரமில்லாமல் வெளியிலிருந்து டிஃபன் வாங்கி வந்து சாப்பிடுகிறாள். ஆனால் கணவனுக்கு அவள் சாப்பாடு வாங்காததைக் கணவன் காண்கிறான்.
இரண்டு காரணங்களுக்காகக் கணவனை நினைத்துப் பாவமாக இருக்கிறது.
நவம்பர் 11
இப்போதெல்லாம் காமம் என்பது ஒரு கேப்சியூல் அளவிற்கு மாறிவிட்டது. ஒரு கேப்சியூல்கூட அல்ல; அரை கேப்சியூல். இன்பத்தை மாத்திரைகளின்மூலம் பெற முடிந்தால் அது எவ்வளவு போலியானதாக இருக்குமோ அப்படித்தான் இதுவும் இருந்தது. இது நிச்சயம் எனது வாழ்வின்பங்களைத் தடை செய்துவிடும்.
நவம்பர் 12
கடந்த சில நாட்களாகவே உடற்பயிற்சி செய்து வருகிற நான், கடைசி 2 நாட்களாக மழை மற்றும் மின்வெட்டு காரணமாகச் செய்யத் தவறியிருக்கிறேன். இன்று உடற்பயிற்சி செய்வதற்கு அவ்வளவு சோம்பலாக இருந்தது. மேலும், நாள் முழுதும் என்னால் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியவில்லை. வேலைகள் இருந்தாலும் மதியம் மேல் சோர்வு நிறைந்த நாளாக மாறிவிட்டது. பிறகு உடற்பயிற்சி செய்துவிட்டுக் குளிர்ந்த நீரில் குளித்த பிறகுதான் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிந்தது. என் உடல் கூடியிருப்பதை அப்பா கண்டுகொண்டு சுட்டிக்காட்டினார். அவரது வார்த்தைகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான ஊக்கத்தை அளித்தது.
இரவு ‘எங்கெங்கு நீ சென்றபோதும்…’ என்ற இளையராஜா பாடலை முதன்முறையாகக் கேட்டேன். இதுதான் தூய வாழ்வின்பம் எனத் தோன்றியது.
நவம்பர் 21
காமத்தை வெல்லும் முயற்சியில் ஒவ்வொரு முறை தோல்வியடையும்போது ஏதேனும் புதிய விஷயங்களை உணர முடிகிறது. முதலில் நான் ஒவ்வொரு முறை தோல்வியடைவதும் Part of the Process என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே இன்னும் துவண்டு போகாமல் ஓடத் தூண்டுதலாக உள்ளது.
கடந்த சில நாட்களாகக் காமத்திலிருந்து ஒதுங்கியிருப்பதன்மூலம் அதைப் பெரிதாக வளர்த்துக்கொள்ள முடிந்தது. நான் அணிந்துகொள்ள வேண்டிய விவேக உடை என்பது மகிழ்ச்சி என நினைக்கிறேன். ஒழுக்கத்தில் ஒரு குறையுமில்லையெனினும், மனதைச் சற்றே கைக்குள் அடக்க வேண்டும். தோல்வியின் வடிவிலமையும் காமத்தின் சுக அளவு சுவைக்க முடியாதபடி ஏதுமற்றிருக்கிறது. இனி இதுகுறித்து எழுதுவது, நினைப்பது, பேசுவது என எல்லாவற்றிலிருந்து விடுபட வேண்டும்.
Comments