லியோ டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி மற்றும் சில ரஷ்ய எழுத்தாளர்கள், தங்கள் கதைக்கான கருப்பொருளை பெரும்பாலும் நீதிமன்றங்களிலிருந்து எடுப்பார்கள். நாம் அன்றாடம் செய்தித்தாள் படிப்பது போல் அவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று வந்தனர். ஒரு நாட்டின் தற்போதைய நிலை மற்றும் அதன் வளர்ச்சியைப் பற்றி அறிய ஒருவர் தினமும் நீதிமன்றத்திற்குச் சென்றாலே போதும். அந்த வகையில் டால்ஸ்டாய், தனது 10 வருடக் கடின உழைப்பில் ‘புத்துயிர்ப்பு’ என்ற இந்த Court Drama நாவலைப் படைத்துள்ளார்.
இந்த நாவலின் முதல் பாகத்தில், நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணை நடைபெறுகிறது. அதில், நீதிபதிகளுக்கு தங்கள் வேலையைத் தாண்டி இருக்கும் நிபந்தனைகளால் உருவாகும் அவசர மனநிலை, 12 Angry Men படத்தை நினைவு படுத்தியது. அவர்களுடைய அந்த மனநிலை, குற்றவாளிக்கூண்டில் நிற்பவருக்குக் கத்தி மேல் நடப்பது போன்ற உணர்வாகும். அவர்களுடைய அவசரத்தாலும் அலட்சியத்தாலும் பொறுமையிழந்து செயல்பட்டால், குற்றம் புரியாத ஒருவர் சில ஆண்டுகள் சிறை கால தண்டனை அனுபவிக்க நேர்ந்துவிடும். அதுதான் இக்கதையில் நிகழ்கிறது.
இந்த நாவல் என்னுடன் உரையாடிய ஓரிடத்தைப் பகிர்கிறேன் :-
‘இந்தப் பையன் ஆபத்தான ஆளாக நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டான். இவனிடமிருந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று கூறப்பட்டது.
இவர்கள் ஆபத்தானவர்களாம். ஆனால் நாம் எல்லோரும் ஆபத்தானவர்கள் இல்லையா? சரி, இந்தக் கூடத்தில் கூடியிருப்பவர்கள் யாவருக்கும் இந்தப் பையன் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்து உண்டாக்குகிறவனாகவேதான் இருக்கட்டுமே. இவன் பிடிபட்டதும், நல்லறிவின் அடிப்படையில் நாம் இவனுக்குச் செய்ய வேண்டியது என்ன?
இவன் சர்வசாதாரணமான சிறுவனே அன்றி, பயங்கர கேடு புரிகிறவனல்ல என்பது தெரிகிறது - எல்லாரும் இதைக் காண்கின்றனர். ஒருவர் இம்மாதிரியான நிலையை வந்தடைகிறான் என்றால், இந்த மாதிரி ஆட்களை உருவாக்குகின்ற நிலைமைகளில் இவன் அகப்பட்டுக்கொண்டதுதான் அதற்குக் காரணம் என்பதும் தெரிகிறது. ஆகவே, இவனைப் போன்ற பையன்கள், இப்படித் தவறான பாதையில் செல்வதைத் தடுக்க வேண்டுமானால் பரிதாபத்துக்குரிய இவர்களை உருவாக்கும் நிலைமைகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்பது தெளிவு.
ஆனால், நாம் செய்வது என்ன? நம் கையில் அகப்பட்டுவிடும் இந்த ஒரு பையனை நாம் பாய்ந்து பிடித்துக் கொள்கிறோம். இவனைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் பிடிபடாமல் இருந்து வருவது நன்றாகத் தெரிந்திருந்தும் இவனை இழுத்துச் சென்று சிறையில் அடைக்கிறோம். சிறைக்கூடத்தில் இவன் வேலை ஏதுமில்லாத சோம்பேறியாகக் காலம் கழிக்கிறான். அல்லது அவனைப் போலவே பலமிழந்து சீர்கேடுற்று விட்ட பலருடன் சேர்ந்து உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பயனற்ற வேலைகளைச் செய்யும்படிப் பலவந்தம் செய்யப்படுகிறான்.
இம்மாதிரியான ஆட்களை உருவாக்கிவிடும் நிலைமைகளை ஒழித்துக்கட்ட நாம் ஏதும் செய்யாதிருப்பதோடு அன்னியில், இந்த நிலைமைகளை உற்பத்தி செய்து தரும் நிலையங்களுக்கு ஊக்கமும் அளிக்கிறோம்.’
‘புத்துயிர்ப்பு’, ஒரு குற்றத்தின் பின்னணியைச் சுற்றி நடக்கும் கதை; அதற்குள் ஒரு காதல் (குற்றவுணர்வு). தஸ்தயேவ்ஸ்கி எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ இதுபோன்ற நாவல்தான். ஆனால், ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில், நான் மேலே குறிப்பிட்ட உரையாடலைப் போலத்தான் நாவல் முழுக்க இருக்கும். அதாவது, 100 பக்கங்கள் வரை நடக்கும் கதை, அடுத்த 1,000 பக்கங்கள் வரை உங்களுடன் உரையாடும். ஆனால், ‘புத்துயிர்ப்பு’ நாவலில் அது அப்படியாக இல்லை. என்னைப் பொறுத்தவரையில். இந்நாவல் முதல் பாகத்திலேயே முற்றிற்று.
கடைசியாக, தி.ஜானகிராமன் எழுதிய ‘மோகமுள்’ படிக்கும்போதும் இதே உணர்வுதான் தோன்றியது. ஒரு குறும் புதினத்திற்கான மிகச் சிறந்த கதையை வைத்துக்கொண்டு, அதை 600 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டிய அவசியம் என்னவெனத் தெரியவில்லை. ’புத்துயிர்ப்பு’ நாவலில் அந்தப் பெண்ணுக்குத் தண்டனை அளிக்கப்பட்டதும், அவளது முன்னாள் காதலன் அவளை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறான். (முயற்சி செய்கிறான், முயற்சி செய்கிறான், 400 பக்கங்களுக்கு அதையே செய்து கொண்டிருக்கிறான்). அவர்கள் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டுமென்ற ஏக்கம், படிக்கும் வாசகர்களாக நமக்கு ஏற்படும் என்றால், அதுவும் இல்லை.
கதையின் நாயகி மாஸ்லவா, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாலியல் தொழில் செய்து வருபவள். அவளைப் பற்றி டால்ஸ்டாய் இவ்வாறு எழுதுகிறார்;
‘அவளது கண்ணோட்டத்தின்படி ஆடவர்கள் எல்லோருக்கும் வாழ்வின் தலையாய இன்பம், கவர்ச்சியான பெண்களுடன் பாலுறவு கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. ஆதலால் எல்லா ஆடவர்களும், பிற காரியங்களில் முனைந்திருப்பதாகப் பாவனை செய்து கொள்வோருங்கூட இதில் ஒன்றில் மட்டுமே ஆசை கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சியான பெண்ணாகிய அவளால் இவர்களது இந்த ஆசையை நிறைவேற்றவும் முடியும். நிறைவேற்றாமல் புறக்கணிக்கவும் முடியும். ஆகவே அவள் முக்கியமானவள், இன்றியமையாதவள். இந்தக் கண்ணோட்டம் பிழையற்றது என்பதை அவளது கடந்த கால, நிகழ்கால வாழ்க்கை அவளுக்கு மெய்ப்பித்துக் காட்டியது.
அவளது வாழ்வின் கடந்த பத்தாண்டுகளில் அவள் இருக்க நேர்ந்த எல்லா இடங்களிலும் ஆடவர்கள் எல்லாருக்கும் தான் இன்றியமையாதவளாய் இருந்ததை அவள் அனுபவ வாயிலாக அறிந்தவள். எனவே உலகமே காமவெறி கொண்டோரது கும்பலாக, முடியுமான எல்லா வழிகளிலும் ஏமாற்றியோ, வன்முறை வழியிலோ விலை கொடுத்து வாங்கியோ தந்திர முறையிலோ அவளை அடைய முயன்ற காமாந்தர்களது கூட்டமாக அவள் கண்களுக்குப்பட்டது.
இந்தக் கண்ணோட்டத்தை அவள் உயர்வாய் மதித்துப் பேணிக் காக்க வேண்டியிருந்தது. ஏனெனில், வாழ்க்கை பற்றிய இந்தக் கண்ணோட்டத்தை இழப்பாளாயின், உலகோர் மத்தியில் கிடைக்கச் செய்த முக்கியத்துவத்தை அவள் இழக்க நேர்ந்துவிடும்.’
பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை எனத் தெரிந்ததும், டால்ஸ்டாய் மதத்தில் பெயரில் சரி, தவறுக்கு உட்படுத்திச் சொல்லி விடுவார் என நினைத்தேன். ஆனால், நல்லவேளையாக அவர் அவ்வாறு செய்யவில்லை.
Anniyil na enna meaning balu