பிப்ரவரி 7, 2021
LIC Client ஒருவரிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வருமாறு அம்மா என்னையும் அண்ணனையும் அனுப்பினாள். நான் அவர் வீட்டின் வெளியே வண்டியில் காத்துக் கொண்டிருந்தேன்; அண்ணன் உள்ளே கையெழுத்து வாங்கச் சென்றான். காகிதத்தின் ஓரத்தில் கிறுக்கல் பெற்று வருவதற்கு அவ்வளவு தாமதம். அப்போது என்னுள் சினிமாத்தனமானக் கற்பனை ஓடிக்கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்ததும் அவன் அம்மாவிடம் சொன்னான், ‘அவங்க நண்டு சூப்லாம் வெச்சு கொடுத்தாங்க. எவ்ளோ நல்லா இருந்தது தெரியுமா? நீயும்தான் இருக்கியே!’
எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
பதிலுக்கு அம்மா, ‘அவங்க Housewife, அப்டித்தான் ஆக்கி போடுவாங்க. இங்க வீட்ல எல்லா வேலையும் நான்தானே செஞ்சிட்டு இருக்கேன்! இவ்ளோ வருஷம் ஞாயித்திகிழமைகூட சீக்கிரம் எழுந்து சமச்சிட்டு இருந்தேன். இனிமேலாம் என்னால சமைக்க முடியாது. பசிக்கிதுனா சமச்சு சாப்பிடுங்க, இல்லைன்னா கடைல வாங்கி சாப்பிடுங்க’ என்றாள். (இன்னும் வீட்டில் என்னைத் தவிர யாரும் ’The Great Indian Kitchen பார்க்கவில்லை. பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளேன்)
அண்ணா கொஞ்சம் மாறிவிட்டானோ எனத் தோன்றியது. இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட அம்மா எங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பேசியதில்லை. அம்மாவின் நண்பர் தங்கள் பிள்ளைகளை எங்களுடன் ஒப்பிட்டுப் பேசும்போதும் ‘பசங்கள Compare பண்ணாதீங்க’ என்பாள். அதனாலேயே அம்மாவை அவர்களுக்குப் பிடிக்கும். விளையாட்டாகச் சொன்னாலும் அண்ணன் அம்மாவிடம் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது.
பிப்ரவரி 13, 2021
’செம்புலப் பெயல்நீர்’ சிறுகதை குறித்து,
தினேஷ் : நித்யாவுக்காகச் சார்ல்ஸ் தான் செய்வதை ஏன் தியாகமாக நினைக்க வேண்டும்? ஆசையை நிறைவேற்றுவதாக நினைக்கலாமே! திருமணம் ஆனதும் குழந்தைப் பெற்றுக் கொள்வதை மூன்று ஆண்டுகள் தள்ளிப் போடுகிறான் சார்ல்ஸ். அவ்வளவு நாட்கள் காத்திருந்தது நித்யா செய்த தியாகம்தானே?
பதில் : நித்யா இடத்திலிருந்து பார்த்தால் அதுவும் தியாகம்தான்.
தினேஷ் : நித்யாவுக்குச் சார்ல்ஸ்தான் உலகம். ஏன் அவனை மட்டுமே தன் உலகமாகக் கருத வேண்டும்? இன்றைய தலைமுறையில் படிப்பறிவில்லாத பெண்களே இல்லை. அப்படியிருக்கையில் ஏன் கணவனைச் சார்ந்த பழைய காலத்துப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும்?
பதில் : கதையிலிருந்து…
'திருமணத்தைத்தான் சீக்கிரம் செய்துகொண்டோம். குழந்தை பெற்றுக்கொள்ளும் யோசனையை மூன்றாண்டுகளுக்கு எடுக்க வேண்டாம்.' என இருவரும் பேசிக்கொண்டனர். நான்கு ஆண்டுகள் நன்றாக வேலை செய்து பதவி உயர்வும், சம்பள உயர்வும் வாங்கிக் குவித்தனர். யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் தேவைகளைத் திருப்தியாகப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு குடும்பம் வளர்ந்திருந்தது.
நித்யாவை முற்போக்கான பெண்ணாகச் சித்தரிக்க வேண்டுமென்பது எனது நோக்கமல்ல; அதேசமயம் அவள் பிற்போக்கானவளும் அல்லள். சாதாரணமாகப் பெற்றோரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, ஒருவனைக் காதலித்து, அந்தக் காதலுக்காகத் தன் பெற்றோரைச் சமாதானப்படுத்தக்கூடிய பெண் அவள். மாற்றத்திற்கே இடம் கொடுக்காதவர்களாகவும் அல்லாமல், அதிகம் மாறிவிட்டவர்களாகவும் அல்லாமல், மாற்றத்தின் இடைநிலையைச் சேர்ந்த குடும்பம் அவர்களுடையது. அவர்கள் தங்கள் சௌகரியங்களுக்கு ஏற்றவாறு சில விஷயங்களை ஒப்புக் கொள்வார்கள்; சில விஷயங்களில் முரண்டு பிடிப்பார்கள். அதாவது, வேற்று மதத்துப் பையனாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் முதல் குழந்தையைத் தள்ளிப் போடாதே என்று சொல்லும் குடும்பங்களில் ஒன்றுதான் இதுவும்.
இந்த இடைநிலை குடும்பத்திற்கு மற்றொரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், ‘Ludo’ படத்தில் ஆதித்ய ராய் கபூர், இணையத்தில் வெளியாகிவிட்ட ஒரு பெண்ணுடன் கொண்ட கலவியின் வீடியோவைத் தன் அண்ணனிடம் பதட்டத்துடன் காண்பித்து, ‘அதில் இருப்பது நான்தான்’ என்பார். உடனே, தம்பியைக் கட்டுப்பிடித்து, ‘நல்லவேளை. நீ ஓரினச்சேர்க்கையாளன் என்று நினைத்துவிட்டோம்’ என்று சொல்லி ஆசுவாசமடைவார். அவருக்குத் தன் தம்பியின் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியானால் பரவாயில்லை; ஆனால் அவன் ஓரினச்சேர்க்கையாளனாக இருந்துவிடக்கூடாது.
தினேஷ் : சார்ல்ஸின் எண்ணம் 27 வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பதா? அல்லது 28 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதா? ஒருவேளை 27 வயதில் திருமணம் செய்திருந்தால் உடனே குழந்தை பெற்றிருப்பானா அல்லது அப்போதும் மூன்று ஆண்டுகள் தள்ளிப் போடுவானா? அவன் அதிகம் திட்டமிடும் நபராகத் தெரிகிறானே தவிர ஆசையுடன் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவனாகக் காணப்படவில்லை.
பதில் : நிறைய ஆண்களுக்குத் தோன்றும் ஒரு எண்ணம்தான் சார்ல்ஸினுடையதும். ஒன்று, திருமணமே செய்துகொள்ளக்கூடாது, அல்லது தாமதமாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். Loving Someone is Different from Living with someone. Charles knows about the Pros & Cons of Living with someone. அதற்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டுமென நினைப்பதால் முதலில் திருமணத்தைத் தள்ளிப் போட நினைக்கிறான். மீறி கல்யாணம் நடந்துவிட்டதால் குழந்தையைத் தள்ளிப் போடுகிறான். அந்த நாட்களில் அவர்கள் இருவரும் நன்றாக உழைத்து பணம் சேர்க்கின்றனர். தன் பிறந்தநாளின்போது நித்யா அவ்வாறு கேட்டதும் முதலில் தன் குடும்ப சூழ்நிலைதான் சார்ல்ஸின் எண்ணத்திற்கு எட்டியிருக்கும். ஓர் உயிரை வளர்ப்பதற்குத் தயாரென்பதைக் கருத்திற்கொண்டுதான் சார்ல்ஸ் ஒப்புக் கொண்டிருப்பானே தவிர நித்யாவின் பிறந்தநாள் பரிசாக அது நிச்சயம் இருந்திருக்காது. ஒருவேளை அவர்கள் பொருளாதார ரீதியில் நிலையற்றவர்களாக இருந்திருந்தால் தனக்கு 40 வயதே ஆனாலும் அவன் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி யோசித்திருக்கவே மாட்டான்.
பிப்ரவரி 17, 2021
மாப்பசானின் ‘Simon’s Papa’ கதையைப் படித்தேன். சைமனுக்குத் தன் தந்தை யாரென்றே தெரியாத காரணத்தால் பள்ளியில் சக மாணவர்களால் கேலி செய்யப்படுகிறான். அதில் ஒருவனுடன் சைமனுக்கு வாய் தகராறு ஏற்படுகிறது.
‘உனக்குக்கூடத்தான் தந்தை இல்லை’ என்கிறான் சைமன், அவனிடம். அதற்கு அவன் ஒரு கல்லறையைச் சுட்டிக் காட்டி, ‘அதோ தெரிகிறது பார். அங்குதான் என் அப்பாவைப் புதைத்தார்கள். எனக்காவது அப்பா இருந்ததற்கு ஆதாரம் இருக்கிறது. உனக்கு அதுகூட இல்லை’ என்கிறான் அந்த சக மாணவன்.
அடுத்த நாள் பள்ளியில் சைமனுக்கும் சக மாணவனுக்கும் சண்டை நடக்கிறது. அடி வாங்கிய சைமனிடம் அவன் சொல்கிறான், ‘முடிந்தால் உன் அப்பாவிடம் என்னை மாட்டிவிடு’. என்ன செய்வதென்று தெரியாமல் சைமன் மிகவும் வருந்துகிறான். அவன் அப்பாவைப் பற்றிய பல்வேறு வதந்திகள் அவன் காதுக்கு எட்டுகிறது.
மறுநாள் ஆற்றங்கரையில் தனியாக அமர்ந்தான். சென்ற வாரம் அதே ஆற்றங்கரையில் பணம் இல்லாத பிச்சைக்காரன் ஒருவன் விழுந்து மூழ்கி தற்கொலை செய்துகொண்ட செய்தியை நினைத்துப் பார்க்கிறான். நாமும் அதேபோல் அப்பா இல்லாத காரணத்தால் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற யோசனை அந்த 15 வயது சிறுவனுக்குத் தோன்றுகிறது. தன் இயலாமையை எண்ணி அழுகிறான். அங்கே வந்த வழிப்போக்கன் ஒருவன் இவன் அழுவதைக் கண்டு விசாரிக்கிறார். அவன் துக்கத்திற்கானக் காரணங்களை அந்த நபரிடம் சொல்லி அழுகிறான். உடனே அந்த ஆள் சொல்கிறார்,
‘சரி, என்னை உன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் உன் அம்மாவைக் காண்பி. உன் அப்பா யாரென்று நாம் கண்டுபிடிக்கலாம்’.
இருவரும் வீட்டிற்குச் செல்கின்றனர். சைமனின் அம்மா பாரிஸ் நகரத்தின் அழகி. அந்த ஆளும் சைமனின் அம்மாவும் பார்த்துக்கொண்ட உடனே அவர்களுக்கிடையில் Sexual tension உண்டாகிறது. வழிப்போக்கன் சொல்கிறான்,
‘உங்கள் பையன் ஆற்றங்கரையில் தொலைந்திருப்பான். அதான் அவனைப் பத்திரமாகக் கூட்டி வந்தேன்.’
‘இல்லை அம்மா. அப்பா இல்லாததால் பள்ளியில் என்னை அடிக்கிறார்கள். நான் அழுதுகொண்டிருந்தேன்’ என்கிறான் சைமன். உடனே வழிப்போக்கனிடம் சென்று,
‘நீங்கள் எனக்கு அப்பாவாக இருப்பீர்களா?’ என்று வினவுகிறான்.
‘நீ விருப்பப்பட்டால் நிச்சயம் இருப்பேன்’
‘அப்போது உங்கள் பெயரைச் செல்லுங்கள். இனி யாராவது உன் அப்பா பெயர் என்னவென்று கேட்டால் நான் உங்கள் பெயரைச் சொல்லிக்கொள்வேன்’
‘ஃபிலிப்’
அடுத்த நாள் பள்ளியில் எல்லோரிடமும் ‘என் தந்தை பெயர் ஃபிலிப்’ என்கிறான் சைமன். யாரும் அவனை நம்பவில்லை. ‘திடீரென்று எங்கிருந்து குதித்தார் அந்த ஃபிலிப்? அவர் உன் அப்பாவாக இருந்தால் உன் அம்மாவின் கணவனாக இருக்க வேண்டுமே. நீ பொய் சொல்கிறாய்’ என்கிறார்கள். இந்த விஷயம் ஃபிலிப்பின் காதுக்கு எட்டுகிறது. அன்று இரவே ஃபிலிப், சைமன் வீட்டிற்குச் சென்று அவனுடைய அம்மா மீதிருக்கும் தன் காதலை வெளிப்படுத்தி Marriage Proposal செய்கிறார். அவளும் அதை ஏற்றுக்கொள்கிறாள். சைமனுக்கு அப்பா கிடைத்துவிட்ட இனிய தருணத்துடன் கதை முடிகிறது.
*
அப்பா இல்லாத சிறுவனைப் பற்றிய இந்தக் கதையைப் படித்ததும் ஷேக்ஸ்பியரின் ‘MacBeth’ நாடகத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. மேக்பெத்தின் கதைச் சுருக்கத்தை இரண்டு வரியில் எழுதி விடலாம்.
பதவிக்கு ஆசைப்பட்டு மன்னரை விருந்தில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு, அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்கிறான் Macbeth.
மறைந்த மன்னர் மீதுள்ள விசுவாசத்தால் மேக்பெத்தைப் பழிவாங்க அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறான் Macduff.
இந்த விஷயத்தை அறிந்ததும், ரத்தக்கறை பட்டவனுக்கு மரணம் தொலைவிலில்லை என்ற உண்மையை அறிந்த Lady MacDuff, தன் மகனிடம் உன் தந்தை இறந்துவிட்டார் என்று உயிரோடிருக்கும்போதே சொல்கிறாள். அம்மாவின் பேச்சை மகன் நம்ப மறுக்கிறான் மகன். அங்கு இந்த வசனம் இடம் பெறுகிறது:
Lady MacDuff : How wilt thou do for father?
Son : If he were dead, you’ll weep for him. If you would not, it were a good sign that I should quickly have a new father.
மாப்பசானின் பேனா இறகைப் போல் மென்மையாகவும், ஷேக்ஸ்பியரினுடையது கத்தியைப் போல் கூராகவும் செயல்பட்டிருக்கின்றன.
பிப்ரவரி 20, 2021
As Oscar wilde said, ‘Everything in this world is about Sex, except Sex; Sex is about Power’
பிப்ரவரி 24, 2021
இந்த ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முதல் நாளான இன்று சென்றிருந்தேன். சர்வதேச திரைப்பட விழாவுக்குச் செல்வது போல கொண்டாட்டச் சூழல் இல்லை. சில பதிப்பகங்கள் தயாராகவே இல்லை. உயிர்மை பதிப்பகத்தில் இந்த ஆண்டு வெளியான எந்தப் புத்தகமும் அச்சிலிருந்து கண்காட்சிக்கு வரவில்லை. ‘1001 அரேபிய இரவுகள்’ நூலை வாங்காமலே வந்துவிட்டேன்.
காலை திரைப்பட விழாவில் ஸ்ரீனியிடம் புத்தகக் கண்காட்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவன் இந்த ஆண்டில் ரூ.2,000க்கு புத்தகங்கள் வாங்கப் போவதாகவும், மனுஷ்ய புத்திரனின் புதிய கவிதைத் தொகுப்புகளை வாங்கப் போவதாகவும் சொன்னான். இதேபோல் சென்ற ஆண்டு ரூ.2,000க்கு வாங்கினான்; அதில் மனுஷின் புத்தங்களின் விலை மட்டுமே ரூ.1,500. அவர் ஒவ்வோர் ஆண்டும் ரூ.2,000 மதிப்புள்ள தொகுப்புகளை வெளியிடுவார். இவன் ரூ.10,000க்கு புத்தகங்கள் வாங்குபவனாக இருந்தால் பரவாயில்லை; ஆனால் இவனிடமுள்ள அனைத்து பணத்துக்கும் மனுஷே நிறைந்துவிடுகிறார். பரிதாபமாக உள்ளது.
*
நான் ரூ.3,000 கொண்டு சென்றேன். அதில் இன்று ரூ. 900க்கு 5 புத்தகங்கள் வாங்கினேன்.
போர்க்குதிரை - லக்ஷ்மி சரவணகுமார் (Zero Degree Publication)
இவர் எழுதிய கானகனைப் படித்திருக்கிறேன்; பிடித்திருந்தது. உப்பு நாய்கள் பிடிக்கவில்லை. இதுவரை இவரது சிறுகதைகளை வாசித்ததில்லை. முகநூல் நண்பர் ரிஷியின் பரிந்துரையின் பேரில் இந்நூலை வாங்கினேன்.
2. என் பெயர் ராமசேஷன் - ஆதவன் (உயிர்மை)
ஆதவனின் ‘காகித மலர்கள்’ நாவலை பாலு மகேந்திரா நூலகத்திலிருந்து எடுத்து வாசித்தேன். இன்றைய இளைஞர்களாலும் கொண்டாடப்படக்கூடிய நாவலை 46 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்தக்களுக்கு ரசிகனாகியதும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருடைய மற்றொரு நாவலான ‘என் பெயர் ராமசேஷன்’-ஐ வாங்கியே ஆக வேண்டுமென முடிவெடுத்துவிட்டேன்.
3. ஐந்து முதலைகளின் கதை - சரவண சந்திரன் (கிழக்கு)
சாரு பரிந்துரைத்ததால்…
4. தந்தை கோரியோ - பால்சாக் (சாகித்ய அகாடமி)
எஸ்.ரா பரிந்துரைத்ததால்…
5. கமலி - சி.மோகன் (புலம்)
திருமண உறவைக் குறித்த புத்தகம் என்று கேள்விபட்டதும் வாங்க வேண்டுமென நினைத்தேன்.
பிப்ரவரி 26, 2021
‘மேடம் பவாரி’ என்ற பிரெஞ்சு நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புதிய வெளியீடுகளை உடனே வாசித்துவிட்டு எழுதினால் மற்றவர்களுக்கு அது பரிந்துரையாகவும் இருக்குமென நினைத்து ‘மேடம் பவாரி’யை பாதியில் வைத்துவிட்டு ‘கமலி’ நாவலை வாசித்தேன். ஒரே அமர்வில் வாசித்துவிடக்கூடிய நாவல்.
முதல் அத்தியாயத்தைப் படித்ததும் இது ‘மேடம் பவாரி’யின் தொடர்ச்சியோ என நினைத்தேன். வாசித்து முடித்து அடுத்த நாள் யோசிக்கும்போதுதான் இதை பாவ்லோவின் ‘Adultery’யுடன் ஒப்பிட முடிந்தது. அந்த எண்ணம் எழுந்ததும் மிகவும் வருத்தமாகிவிட்டது. ‘கமலி’யை இன்னும் சிறப்பாக எழுதியிருந்தால் நிச்சயம் ‘Adultery’யைவிடச் சிறந்த நாவலாக வந்திருக்கும். எப்படிச் சொல்கிறேனெனில், இரண்டுமே Affair நாவல்தான். ஆனால் ‘Adultery’ உட்பட பல்வேறு Affair நாவல்கள் தொடாத விஷயங்களை ‘கமலி’ தொட்டிருக்கிறது.
1. Mid Life Crisis-ஐ Affair-க்கு காரணமாகக் கொண்டு வராதது. கமலி, கண்ணனைக் கண்ணனுக்காகவே காதலிக்கிறார். மற்றபடி, அவளது கணவனான ரகுமீது அவளுக்கு ஒரு குற்றச்சாட்டும் கிடையாது. இன்னொரு காதல் எழுவதற்கு நம் துணையின் போதாமையே காரணமாக இருக்க வேண்டுமென்ற எந்தக் கட்டாயமுமில்லை. உலக அழகன்/அழகி நமக்குக் காதலராக வாய்த்தாலும், தங்கத்தட்டில் வைத்துத் தாங்கும் துணையுடன் நம் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டால்கூட மற்றொரு காதல் என்பது மனிதனின் இயல்பே. ஆனால் ‘Adultery’ நாவல் Mid life Crisis, Boredom ஆகியவற்றை முக்கியமான அம்சங்களாகக் கொண்டுள்ளது.
2. திருமணத்திற்குப் பிந்தைய காதலென்பது அவளுக்குக் குற்றவுணர்வாகவே இல்லை. ஆனால் பாவ்லோவின் நாவலின் இறுதியில் அந்தப் பெண் கதாபாத்திரம் எல்லாவற்றையும் விட்டுக் கணவன், பிள்ளையுடன் நிம்மதியாக வாழ்வதுபோல் முடிக்கப்பட்டிருக்கும். எல்லோரும் செய்வதுபோல் பாவ்லோவும் அறத்தைப் புகுத்தியிருப்பார்.
ஒரு எழுத்தாளன் தான் எழுதும் கதாபாத்திரத்திற்கு அறிவுரை செய்வதென்பது எவ்வளவு பெரிய வன்முறை? அதனால்தானே இன்று வரை ‘அன்னா கரீனினா’வின் முடிவு விவாதிக்கப்பட்டும், அதனைச் செய்யாததால் செகாவின் ‘நாய்க்காரச் சீமாட்டி’ கொண்டாடப்பட்டும் வருகிறது. இருந்தும், ‘Adultery’ உலகம் முழுதும் வாசிப்பதற்குக் காரணம் அது நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்பதற்காகத்தான். அதைவிட ‘கமலி’ சிறந்த கதை. ஆனால் சிறந்த நாவல் என்று சொல்ல முடியாது.
‘கமலி’ மூலம் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொண்டேன். ஒன்று, காதலின் குற்றவுணர்வு என்பது முன் நவீனத்துவம் ஆகிவிட்டது. இரண்டு, Sometimes What you don’t is important than what you do.
பிப்ரவரி 27, 2021
இன்று இரண்டாவது முறையாக இந்த ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:
69 - CSK (உயிர்மை)
டப்ளின் நகரத்தார் (சிறுகதைத் தொகுப்பு) - James Joyce (தமிழினி)
இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் கதை (பிறமொழி சிறுகதைகள்) (தமிழினி)
அனல் காற்று - ஜெயமோகன் (தமிழினி)
ஒன்றரை வருடத் தேடலுக்குப் பிறகு இந்த நாவல் கைக்குக் கிட்டியுள்ளது. கண்டுபிடித்ததும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
5. பூனைகள் நகரம் - முராகமி (வம்சி)
முராகமியின் புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைவிடத் தமிழ் மொழிபெயர்ப்பின் விலை குறைவாக இருப்பதால் யோசிக்காமல் இச்சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ளதால் எவ்வித தயக்கங்களுமில்லை.
5. போரும் வாழ்வும் - டால்ஸ்டாய் (New Century book house)
மத்தியானம் பாரியுடன் நிழலில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தேன். ‘வாழ்வில் எப்பாட்டுப்பட்டாவது போரும் வாழ்வும் நாவலை ஒருமுறையேனும் வாசித்துவிட வேண்டும். ரூ. 2,000 கொடுத்து வாங்குமளவுக்குத் தற்போது பணமில்லை. அந்தக் காசில் மற்ற எழுத்தாளர்களை Explore செய்யலாமென்றுதான் தோன்றியது. சம்பாதித்துவிட்டுத்தான் வாங்க வேண்டும் போலும்’
இதைப் பேசிக் கொண்டிருக்கும்போது போரும் வாழ்வும் வாங்கும் யோசனையெல்லாம் சிறிதுமில்லை. மாலை கிளம்பும்முன் தேசாந்திரி பதிப்பகத்தில் புத்தகங்கள் பார்த்தவாறு இருந்தேன். வாங்கலாமென முடிவு செய்து கையில் ‘சிறிது வெளிச்சம்’ புத்தகத்தை வைத்திருந்தேன். அவசரமாக வந்த நிர்மல், ‘என் நண்பனிடம் Staff Pass உள்ளது. அதைக் காட்டினால் 30% Off. போரும் வாழ்வும் வாங்கிக் கொள்கிறாயா?’ என்றான். உடனே ‘சிறிது வெளிச்சம்’ புத்தகத்தை வைத்துவிட்டு New Century Book House-க்கு ஓடினேன். ‘போரும் வாழ்வும்’-ஐத் தொட்டதும் ரூ.2,000 நாவலை, அதுவும் இரண்டு பிரதிகள் வாங்குபவருக்கு உண்டான மரியாதையையும் கவனிப்பையும் அளித்தனர். ஆனால் நாங்கள் பாஸில் வாங்க வந்தது தெரிந்ததும் ஏமாற்றமடைந்து போனவர்கள் 25%தான் கொடுக்க முடியும், அதுவும் ஒரு பிரதிதான் என்றார்கள். ஒத்துக்கொண்டு, ரூ.2,250 மதிப்புள்ள நாவலை ரூ.1,685க்கு வாங்கி வந்தேன். ஒருவழியாக நீண்ட நாட்கள் தேடிய ‘அனல் காற்று’ நாவலையும், Dream Book-ஆன ‘போரும் வாழ்வும்’ நாவலையும் வாங்கியது இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சியை முழுமையடையச் செய்து திருப்தியாக்கியது. இதற்கு முழு காரணம், வேண்டிய புத்தகங்களை வாங்கிக்கொள்ளச் சொல்லி பணம் கொடுத்து ஊக்குவித்த என் குடும்பத்தினர்.
வாங்கத் தவறிய புத்தகங்கள்:
கொல்லப்படுவதில்லை - மைத்ரேயி தேவி (சாகித்ய அகாடமி)
1001 அரேபிய இரவுகள் (உயிர்மை)
ஆதவன் சிறுகதைகள்
Comentarios