பாலு,
கால வெளியிடை படித்தேன்; சந்தோஷம். உன்னுடன் பழகிய நான்கு வருடங்களில் நான் உன்னிடம் கண்ட கருத்தியல், ரசனை, உணர்வுகள் எல்லாம் சேர்த்து பாலுவை ஒரு புத்தகமாக படித்ததுபோல் இருந்தது. கவிதை, கருத்தியல், 'பால்ய கால சகி', புத்தகக் கண்காட்சி, சங்கீதா, வருண், லீலாவின் நிஜப் பெயருக்குப்பின் உள்ள ரகசியம், ப்ரீத்தாவின் மனநிலை, லீலாவின் தடுமாற்றம் என பலவற்றை ரசித்தேன். மனம் கொஞ்சம் பாரமாகவும் இருந்தது. வருண், எனக்கு பாலு எப்படி இருக்கிறானோ அப்படி தெரிந்தான்; நித்யன், பாலு எப்படி இருக்க விருப்பப்படுகிறானோ அப்படி தெரிகிறான். மற்ற கதாப்பாத்திரங்களிலும் உன்னைக் கண்டேன். இதை ஒரு குறுநாவல் என்று சொல்வதை விட Semi - Biography என்றே கருதுகிறேன். மணி ரத்னம், ரஹ்மான், அதிதி ராவ் ஹைதரி, மறுபடியும், தித்திக்காதே, காதலும் கடந்து போகும், இசை என்று உன் வாழ்க்கையையும் ரசனையையும் எண்பது பக்கத்திற்கு ஒரு புத்தகமாக கோர்த்துள்ளாய்.
"சிகிரெட் பிடிச்சா அடுத்த ஒரு மணி நேரத்துக்கு எனக்கு முத்தம் கொடுக்காத, குடிச்சா அந்த நாள் முழுக்க கொடுக்காத. வாய் நாறுது" என்று திருமணம் ஆன புதிதில் விமலா சொன்னதை நினைத்துக் கொண்டே கிருபா புகைப்பிடித்தது என்னை மிகவும் கவர்ந்து யோசிக்க வைத்தது. 'வருண் தன் அப்பாவை பற்றி யோசிக்கும்போதெல்லாம், அவர்கள் வீட்டு வேப்பமரம் சரிந்து விழுந்து அன்று அவர் அதன்முன் அமர்ந்து அழுத தருணம் ஒரு சித்திரமாய் இவனுக்கு நினைவில் தோன்றும்' - இந்த வரி என்னை பிரம்மிக்க வைத்தது. ‘The Hottest Love Story has a Coolest End’ என்ற Socrates வரிக்கு நீ கொடுத்த விளக்கம், 'முற்றுப்புள்ளி வைக்காமல் மூன்றுப்புள்ளி' எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
'The best way to get over a Women is to turn her into a literature' என்று Henry Miller சொன்னதை நிறைவேற்றி விட்டாய். இது எனக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது. காதலை கடக்க முடியாத இயலாமையில் இருக்கும் அனைவருக்கும் அந்த உந்துதல் கிடைக்கும். எனவே, மகிழ்ச்சி.
Comments