செகாவை நினைக்கும்போதெல்லாம்
மனம், இன்பத்தைத் தவிர வேறு எதற்கும் இடமளிக்காது.
காரணம்,
செகாவ் மரணித்த காலத்தில்
நான் வாழாமல் போனதே!
மனிதர்களின் அன்பைவிட
ஆசான்களின் கலைகளே
எனது நாளை ஆட்கொள்கின்றன.
நான் ஆசான்களைத் தேர்ந்தெடுப்பதில்
மிகக் கவனத்துடனும் விழிப்புடனும் உள்ளேன்.
ஒரு மேதையின் மரணத்தால்
ஏற்பட்ட கண்ணீர்த் துளிகள்
வாழ்வின் துயர அறையின்
கதவுகளைத் திறந்துள்ளன.
பாலு மரணித்தபோது
பாலு வடித்த கண்ணீரெல்லாம்
பாலு மறைந்தது குறித்து அல்ல;
ராஜாவின் இறுதி நாளை நினைத்து…
மேதைகளின் மரணங்களை எதிர்கொள்ளும் காலம் பிறந்துள்ளது
அன்புள்ள ரத்தினத்திடமும் கார்வாயிடமும்
யான்னியிடமும் ராஜாவிடமும்
நான் வேண்டிக்கொள்கிறேன்.
மேதைகளின் மரணங்களை தாங்கிக் கொள்ளும் ஞானத்தை
தங்களது கலைகளின்மூலம்
இவ்வுலகிற்கு விட்டுச் செல்லுங்கள்
ஏனெனில்,
அவரிடம் என்னால் இனி வேண்டுகோள்களை வைக்க முடியாது
பிரியாவிடை கிம் கி டுக்!
Comments