top of page
Search
Writer's pictureBalu

மார்ச் மாத நாட்குறிப்பு

மார்ச் 4, 2021

பொதுவாக என் கதைகளுக்கு வரும் இரண்டு வகையான வாசகர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்துவேன். முதலில் அதிகம் இலக்கியம் வாசிப்பவர்களின் கருத்துக்களை அப்படியே எடுத்துக்கொள்வேன். இரண்டு, பெரிதும் இலக்கியம் பரிட்சியமில்லாத ஜனரஞ்சக வாசகர்களின் கருத்து. அவர்கள் வெறும் கதையில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். அதை மேம்போக்கான மனநிலையுடன் எடுத்துக்கொள்வேன். ஆனால் பெரிதும் இலக்கியம் பரிட்சியமில்லாத சினிமாக்காரர்களின் மற்றும் Cinephiles என்று அழைக்கப்படக்கூடிய தீவிர சினிமா ரசிகர்களின் கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு ஒவ்வாமை. இது என் கதைகளுக்கு என்றல்ல; பொதுவாகவே அவர்கள் வாசிக்கும் படைப்புகள்மீது அவர்களுக்கு உண்டாகும் கருத்து எனக்கு என்னவோ மிகவும் அந்நியமாகப் படுகிறது.


உதாரணமாக, முராகமியின் ‘Norwegian Wood’ஐ பாதி படித்த ஒருவன் ‘GVM படம் பார்த்தது போன்ற உணர்வு இருந்தது’ என்கிறான். அங்கேயே அவனது வாசிப்பனுபவம் சுக்குச் சுக்காக நொருங்கிவிட்டது.

‘செம்புலப் பெயல்நீர்’ சிறுகதைக்கு திரைத்துறைசார் நண்பர் ஒருவர் ‘சில காட்சிகளைச் சேர்த்திருந்தால் கடைசியில் Emotions இன்னும் நன்றாக Convey ஆகியிருக்கும்’ என்றார். அது இலக்கியத்தின் வடிவமே இல்லையென்று தோன்றுகிறது. எந்தக் கதைசொல்லல் கலையிலும் இல்லாத சிறப்பம்சம் ஒன்று இலக்கியத்திற்கு இருக்குமானால் அது உணர்வுகளை Manipulate செய்யாததே! ஒரு சோகமான அத்தியாயத்தைப் படிக்கிறோமெனில் நமக்குத் தேவையான அளவின் சோகத்தை மட்டுமே உணரும் சுதந்திரம் வாசிப்பில் நமக்கு உள்ளது. இங்குக் கதையாசிரியனுக்கு எழுதுவது மட்டுமே வேலை. அவன் எழுதிய அத்தியாயத்தின் உணர்வு எந்த அளவிற்குச் சென்று சேர்கிறது போன்ற சமாச்சாரங்களெல்லாம் அவனுக்குத் துளியும் தேவையற்றது. அதேபோல் ‘செம்புலப் பெயர்நீர்’ கதையின் முடிவு வாசகர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியதா இல்லையா என்பதில் எனக்குக் கொஞ்சம்கூடக் கவலையில்லை.




மார்ச் 10, 2021

மாப்பசானின் ‘Monsieur Parent’ கதையை வாசித்தேன். பேரன்ட் என்பவனின் வீட்டில் குடும்ப நண்பர்களுடனான இராவுணவுடன் கதை தொடங்குகிறது. அவனுடைய மனைவி ஹென்ரீட் வீடு திரும்புவதற்குத் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இராவுணவில் பேரன்ட், அவனது நெருங்கிய தோழியான ஜூலி, அவளுடைய கணவன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜூலிக்கு ஹென்ரீட்டைச் சுத்தமாகப் பிடிக்காது. எந்தப் பெண்ணுக்குத்தான் Bestie-ன் மனைவியை/காதலியைப் பிடித்திருக்கிறது! பேரன்டை Granted ஆக எடுத்துக்கொண்டு இராவுணவுக்கு இவ்வளவு தாமதமாகியும் வராத ஹென்ரீட்டை ஜூலி வெறுக்கவே செய்தாள். நீண்ட நாட்களாக மறைத்து வைக்கப்பட்ட உண்மையை பேரன்டிடம் தெரியப்படுத்துகிறாள் ஜூலி:


‘உன் மனைவி உனக்குத் துரோகம் செய்கிறாள். அவளை நம்பாதே. நீ வளர்க்கும் மகன் ஜார்ஜ் உன்னுடையவன் அல்லன்; அவன் ஹென்ரீட்டின் நண்பனும் காதலனுமான லிமௌசனின் குழந்தை’

இதைக் கேட்ட பேரன்ட், ஜூலியை அப்படிச் சொல்ல வேண்டாமெனச் சொல்லித் திட்டுகிறான். ‘என் மனைவி அப்படிப்பட்டவள் அல்லள்; நீ உன் நாவை அடக்கு’ என்பதே அவனது வாதமாக இருக்கிறது. தொடர்ந்து ஜூலி உண்மைகளை அடுக்கிக்கொண்டே போக, அவளை வீட்டை விட்டே வெளியே துரத்திவிடுகிறான்.

ஜூலி சென்றதும் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் இவனை வாட்டுகின்றன. ஜார்ஜின் உருவத்தையும் லிமௌசன் உருவத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான். அவனுக்குப் பதில் கிட்டவேயில்லை. அப்போது லிமௌசனுடன் வீடு திரும்புகிறாள் ஹென்ரீட்.

(அதற்குப் பிறகு நிகழும் அற்புதத்தை நீங்கள் படித்துப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கதை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது)

செகாவ் எழுதிய ‘நினோக்கா - ஒரு காதல் கதை’யில் ‘Monsieur Parent’ கதையின் தாக்கம் நிறையவே நிறைந்திருக்கிறது. ஆனால் மாப்பசான் உணர்வுகளின் உச்சத்திற்குச் சென்றுவிடுகிறார். செகாவோ அன்றாட வாழ்வின் யதார்த்தத்தைக் கையாள்கிறார். எப்படி தஸ்தயேவ்ஸ்கி ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் உணர்வுகளின் உச்சத்தைத் தொட, செகாவ் ‘An Avenger’ கதையில் அன்றாட யதார்த்தத்தைப் பேசினாரோ அதேபோல; இரண்டு கதைகளும் கொலையை முன்வைத்துச் சொல்லப்பட்டவை என்பதால் தஸ்தயேவ்ஸ்கியின் பெரும் புதினத்தை செகாவின் 4 பக்க கதையுடன் ஒப்பிட்டேன்.






மார்ச் 15, 2021

‘I never meet my lovers after I had left them. It would be bad to meet them - like meeting the dead’

  • Maxim Gorgy

கார்க்கியின் இந்த வாசகத்தை நானும் பின்பற்ற வேண்டுமென நினைப்பேன். ஆனால் முடிவதேயில்லை. தன்னை நேசித்த நபருடன் பிரிவுக்குப் பின்பும் நண்பராகப் பழகும் அதிநவீன காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அது ஏற்படுத்தக்கூடிய வலி, வெறுமை, பொறாமை, அகங்காரம் அனைத்தும் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன. அந்நபரின் இருப்பு ஒரு வகையில் கொடியதாக இருக்கிறதெனில், இன்மை அதனினும் கொடியதாக இருக்கிறது. இன்மையைவிட இருத்தல் குறைந்த வலியைக் கொடுப்பதால் அந்நபரை அவ்வப்போது சந்தித்து வருகிறேன். I don’t feel like meeting the dead, Rather, I feel like dead & Soulless while meeting my Lover who had left me.




மார்ச் 17, 2021

‘கால வெளியிடை’ குறுநாவல் வெளியாகி ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அதன் பிரதியை முதன்முறையாக எடுத்துப் படித்தேன். 70 பக்கங்களில் ஒரு பக்கத்தைக்கூட என்னால் ரசிக்க முடியவில்லை. நான் படைத்ததில் எந்த விதத்திலும் எனக்குத் திருப்தி அளிக்காத குறுநாவலது. Cliche. ஒரே ஆண்டில் Expiry ஆகிவிட்ட கதை.

ஆனால் அதில் எழுதப்பட்ட மனிதர்களுக்காக அதை நெருக்கமாக உணர்ந்தேன். இப்போது அந்தக் கதாபாத்திரத்தின் நிஜ மனிதர்களுமே எனக்குத் தீர்ந்துவிட்டனர். ‘கால வெளியிடை’யின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருடனும் இனி என் வாழ்வின் பயணிக்கக்கூடாது என முடிவு செய்துள்ளேன். (பெரும்பாலானோர் வருண் கதாபாத்திரத்தை என்னையே கற்பனை செய்து படித்த காரணத்தால், கிருபாவும் விமலாவும் என் பெற்றோர்கள் இல்லையென்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்)


மற்றபடி, லீலா, சங்கீதா, நித்யன் மற்றும் இக்கதாபாத்திரங்களில் நிறைந்திருக்கும் வேறு சில மனிதர்களையும் என் நினைவுகளிலிருந்து முற்றிலுமாக அழித்துவிடுகிறேன். Shift+Delete




மார்ச் 19, 2021

(அனல் காற்று படித்தவர்களுக்கு மட்டும்)

இந்நாவல் ஓர் உச்சம்; ஆனால் கடைசி அத்தியாயம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘எல்லாம் வெறும் செக்ஸ்தான்’ என்று மோகமுள் தி.ஜாவைப் போல் ஸ்டாண்ட் எடுக்க வேண்டுமெனில் அதை ஏன் ஜெயமோகன் இளம்பெண் சுசிக்கு எடுக்காமல் வயதான சந்திராவுக்கு மட்டும் எடுத்தார். திருமணமாகிக் குழந்தை பெற்ற நடுத்தர வயது பெண்மீது கவர்ச்சி தோன்றி அவ்வுறவு எல்லா உறவுகளையும் போல் குழப்ப நிலையை எட்டினால் அதிலிருந்து தப்பிக்க இதுபோன்ற ‘வெறும் செக்ஸ்’ பயன்படுகிறது. இளம்பெண்ணுக்கு அந்த ‘வெறும் செக்ஸ்’ஸைப் பயன்படுத்த இடத்தில் இது பத்து வருட பழைய நாவல் என்பதை நினைவு படுத்துகிறது. இருந்தும், ஜெயமோகன் கேட்டுக்கொண்டதைப் போலவே அவருடைய கருத்துக்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.




மார்ச் 22, 2021

நான் பிறந்து இன்றுடன் 8,000 நாட்கள் ஆகிவிட்டன. எனது 9,000வது நாளில் நான் எப்படிப்பட்டவனாக இருப்பேன் என்பதை Resolution ஆக எடுக்கத் தோன்றியது. எப்படிப்பட்டவனாகவும் ஆக வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை அன்று எட்டியிருப்பேன் என நம்புகிறேன்

.

42 views0 comments

Comentarios


Post: Blog2_Post
bottom of page