‘பாலியல் வறட்சி’ குறித்த கட்டுரையை வாசித்தவர்களில் இருவர், தலா ஒரு கேள்வியை முன்வைத்து விரிவாக எழுதச் சொல்லிக் கேட்டனர்.
1. ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?
‘நட்பு’ மீது எனக்கு நம்பிக்கை இல்லையெனினும் அதை முக்கியமான உறவாகவே பார்க்கிறேன். இதுகுறித்து ஜோர்டன் பீட்டர்சன் கட்டுரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன். ‘நண்பர்’ என்ற சொல் இயல்பாக்கம் செய்யப்பட்டுத் தெரிந்தவர், தெரியாதவர் என எல்லோர் மீதும் பிரயோகிக்கப்படுகிறது. அதன் வழியாக எனது கருத்தைச் சிந்தித்தால், ‘பெண்ணுடன் தோழமையுடன் பழகக்கூடாது’ என்பதாக புரிந்துகொள்ளப்படலாம். அது அப்படி அல்ல.
எதிர்பாலின தோழமை சாத்தியமில்லை என்பதை எனது உயிரியல் கூறிலிருந்தே சொல்கிறேன். இந்தப் பூமியில் வாழும் எல்லா மிருகங்களைப் போல மனித இனத்தைச் சேர்ந்த எனக்கும் இனப்பெருக்கம் ஒன்றே அடிப்படை குறிக்கோள். கலை, இலக்கியம், வணிகம், வீரம் ஆகியவை உலகம் இயங்கும் முறைக்கேற்ப மாறுபடக்கூடியது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுக்கும் நமக்கும் லட்சியப் பார்வை, அரசியல் பார்வை ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் காலத்துக்கும் மாறாத ஒரே குறிக்கோள் (Purpose) இனப்பெருக்கம். ஒரு மிருகமாகச் சிந்திக்கும்போது எதிர்பாலினத்தவரை வெல்லும் வேட்கையில்தான் என்னால் செயல்பட முடியும். எனக்கு மட்டுமல்ல; பெண்களுடன் தோழமை பாராட்டும் ஆண்களுக்குமே இது பொருந்தும்.
நான் சொல்வதை ஏற்காத பெண்களுக்கு ஒரு டாஸ்க் சொல்கிறேன். ‘உடல் வழி நோக்காதவன்’ என்று நீங்கள் நினைக்கும் நெருங்கிய நண்பனிடம் (காதலி இல்லாதவனாக இருந்தால் இன்னும் சிறப்பு) “Why can’t we hook up?” என்று கேட்டுப் பாருங்கள். ஆண் - பெண் தோழமையிலுள்ள உண்மைத்தன்மை என்னவென்பதைப் புரிந்துகொள்ளலாம். “நான் உன்னை அந்த நோக்கத்தில் பார்க்கவில்லை” என்று ஓர் ஆண் மறுக்கிறான் எனில், நீங்கள் அவனுடைய தரத்தை (Standards) ஈடுசெய்யவில்லை என்று கருதலாம். துரதிர்ஷ்டவசமாகப் பல சராசரி ஆண்களுக்கு Standards இருப்பதில்லை. அழகற்ற பெண்களுக்கும் அவர்கள் இதில் மறுப்பு தெரிவிப்பார்கள். மற்றபடி ஓரளவு அழகான பெண் கேட்டாலும் அவளுடன் படுக்கையைப் பகிர ஆண்கள் தயாராகவே இருப்பார்கள்.
பெண்ணிடமிருந்து எனக்கு என்ன தேவை? (நீங்களும் உங்களைக் கேட்டுக்கொண்டு Analyze செய்யலாம்
- Sex & Intimacy
- Peace of mind
- Loyalty
நண்பரிடமிருந்து எனக்கு என்ன தேவை?
- Criticism
- Competitiveness
- Emotional Support
இரண்டிலும் 3 புள்ளிகளை மட்டுமே வைத்திருக்கிறேன். உங்கள் வசதிக்கேற்ப புள்ளிகளைக் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம். ஒரு பெண்ணிடமிருந்து தேவைப்படும் எதுவுமே நண்பரிடம் தேவைப்படவில்லை. நேர் மாறாகவும் அப்படியே. பெண் கொடுக்கக்கூடிய நிம்மதியை நண்பன் கொடுக்கக்கூடாது. விமர்சிப்பதே அவனின் பணி. பாராட்டிக்கொண்டே இருக்கும் நண்பன், வளர்ச்சிக்குக் காரணமாக இருக்க மாட்டான்.
பெண்களிடமிருந்து எதிர்பார்க்கும் விசுவாசத்தை நண்பனிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. நண்பர்கள் பலர் இருக்கலாம்; துணை ஒன்றுதான். அதேபோல் என்னுடன் போட்டி மனப்பான்மையிலிருக்கும் ஒருவனிடம் விசுவாசத்தை எதிர்பார்ப்பது எப்படி நியாயம்? அவனை வீழ்த்த நினைப்பதும் அவனிடம் வீழ்வதுமே ஆட்டத்தின் சுவாரசியம்.
துயரில் வாடும்போது அதைப் பகிர பெண்ணுக்கு பதில் நண்பனே எனது தேர்வாக இருப்பான். பெண்ணிடம் உடைந்து போய் அழுகையை வெளிப்படுத்தி மரியாதையைக் குறைத்துக்கொள்ளும் தவற்றைக் கடந்த காலத்தில் ஒன்றிரண்டு முறை செய்திருக்கிறேன். ஆனால் இனி அது சாத்தியமில்லை. எனக்கு அழத் தோன்றினால் உடனடியாக நண்பனுக்குத்தான் தொடர்புகொள்வேன். ஆண் தன் பலவீனத்தை வெளிக்காட்டும்போது தற்காலிக ஆறுதல் தருபவளாகவும், பிறகு தண்டிப்பவளாகவும் பெண் இருப்பாள். ஆகவே மனமுடையும்போது ஆண் குழுவிடம் செல்லுங்கள்.
ஒரு நண்பரிடம் எனக்கு இருக்கும் தேவைகள் எதையும் பெண்களால் பூர்த்தி செய்ய முடியாது. உயர்ந்த நோக்கங்கள் கொண்ட எல்லா ஆண்களுக்கும் அப்படியே. ஆன்டன் செகாவின் ‘இளஞ்சிவப்பு காலுறை’ கதையின் கடைசி பத்தி நினைவுக்கு வருகிறது.
‘ஒரு கற்றறிந்த நாகரீக மனிதனாக புத்திசாலி பெண்களுடன் அறிவு சார்ந்த உரையாடல் வைத்துக்கொள்வதற்கான ஆசைகளும் அவ்வப்போது அவருக்கு ஏற்படும். ‘அதுபோன்ற சமயத்தில் என்ன செய்வது?’ என்று சோமோவ் சிந்தித்தார். ‘அறிவு சார்ந்த உரையாடல் வைத்துக்கொள்ளத் தோன்றினால் நான் நதால்யா ஆண்ட்ரியேவ்னா அல்லது மரியா ஃப்ரான்ட்சோவ்னாவிடம் சென்றுகொள்கிறேன். அவ்வளவுதானே! இல்லை, இல்லை! எதற்கு அவர்களிடம் சென்றுகொண்டு? அறிவார்ந்த விஷயங்களை ஆண்களுடன் விவாதிப்பதே சரியாக இருக்கும்’ என்று ஒருவழியாக முடிவு செய்தார் சோமோவ்.’
2. கேஷுவல் செக்ஸ் ஏன் தீங்கு விளைவிக்கக்கூடியது?
பாலியல் வறட்சி தலைதூக்கியிருக்கும் காலத்தில் ஆண்களுக்கு செக்ஸ் எந்த வகையில் கிடைத்தாலும் நன்மைதான். கேஷுவல் செக்ஸ் அவர்களுக்கு நேரடியாக தீங்களிக்கக்கூடியது இல்லையெனினும் காலங்கழிந்து, ஏவாள் முன் வந்து நின்ற சாத்தானைப் போல் பிரச்சனையாக உருவெடுக்கும்.
கலவி கிட்டாத காலத்தில் கேஷுவல் செக்ஸ் இளம் ஆண்களுக்கு நன்மையளிக்கக்கூடியதுதான். ஆனால் கேஷுவல் செக்ஸ் இயல்பாக்கம் செய்யப்பட்டால் இதில் அதிகம் ஈடுபடக்கூடியவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். உதாரணமாக 50% பெண்கள் கேஷுவல் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் எனில், அதே சதவீத அளவில் ஆண்களாலும் பங்களிக்க முடியாது. எல்லா வகையிலும் Hyper successful ஆக இருக்கும் 10% சதவீத ஆண்கள், கேஷுவல் செக்ஸில் விருப்பம் காட்டும் 50% பெண்களை எடுத்துக்கொள்வார்கள். கலவியின்போது Oxytocin ஹார்மோன் ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக சுரப்பதால் அவர்களின் உயிரியல் கூறு அதனை ‘வெறும் கலவி’ என்று பார்க்காது. “Just sex” என்று சொல்லி தங்களை ஏமாற்றிக்கொண்டாலும் அவளுடைய மனம் புணர்ந்தவனை நாடும். உணர்ச்சிகளால் சிந்திக்கக்கூடிய பெண் மனம் அப்படி நாடுவது இயல்பானதே. ஆனால் Top 10% ஆணுக்கு Options அதிகமாக இருப்பதால், உயர்ந்த விருப்பத் தேர்வுகளைக் கொண்டு இப்பெண்ணைப் பிற்காலத்தில் புறக்கணித்துவிடுவான். கேஷுவல் செக்ஸ் வைத்த பெண்ணால் தான் ஈடுபட்ட கலவியை எண்ணி முழு மனத் திருப்தி கொள்ள முடியாது. சொல்லப்போனால் அது அவளை துயருக்குள்ளாக்கும். அதிலிருந்து வெளிவர மீண்டும் கேஷுவல் செக்ஸையே ஆயுதமாக இருப்பாள். இவளது Sexual & Emotional Baggage அதிகமாகிக்கொண்டே இருப்பதால் பாதிக்கப்படப்போவது அவளது எதிர்காலக் கணவன்தான். Top Tier ஆண்கள் இதுபோன்ற பெண்களை மதிக்கவே மாட்டார்கள் என்பதால் இதன் எல்லா விளைவுகளும் சராசரி ஆணின் தலையில்தான் விடியும். ஆகவேதான், வருங்காலத் துணையின் கடந்த காலத்தைக் கேட்டறிந்துகொள்வது இன்றியமையாதது.
Comments